முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை புரிந்து கொள்வோம்


சிவமயம்
 
திருச்சிற்றம்பலம்
 
மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்
 
பன்னிரு திருமுறையில் சிவபுராணம்

தமிழின் தொடக்க கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், பதினெட்டு மேல்தொகை, பதினெட்டு கீழ்த்தொகை என தொகுக்கப் பெற்றன. அவை சமுதாயம் பற்றியும் அறம் பற்றியும் கூறும் நூல்கள். பக்தி இலக்கியம் அகநிலை இலக்கியம். பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் அருளியது. 4, 5, 6 அப்பர் என்ற திருநாவுக்கரசர் அருளியது. சுந்தரர் அருளிய தேவாரம் 7 ம் திருமுறையாகும். எட்டாவது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். ஒன்பதாவது திருவிசைப்பா. திருமந்திரம் பத்தாவது திருமுறை. 40 பிரபந்தங்கள் பதினோராம் திருமுறை. திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் 12வது திருமுறை. 8 வது திருமுறையான மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தில் முதல் பகுதி 95 வரிகள் கொண்ட சிவபுராணம். சிவபுராணம் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசக பெருமான் அருளியது.

பொங்கிவழிகிறது சிவன் அருள்

ஓம் நமசிவாய. இடைவிடாது சூரியனை சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமி, இறைவனின் அருள் பெற்றது. அவன் அருளினாலே நீரும் நிலமும் தோன்றி பல்வேறு உயிரினங்களையும் உருவாக்கி வாழவைத்து வருகிறது. படைத்தவனைப் பற்றிய சிந்தனை பெற்று அவனை அறிய பல்வேறு முயற்சி செய்து, அவனை உணர்ந்து, அவனை போற்றி அவனை சரணடைந்து அவன் திருவடி சேர்ந்தவர் பலர். அவனை அறிந்தவர் பலர். அவனை உணர்ந்தவர் பலர். அவன் திருவடி சேர்ந்தவர் பலர் பலர். அவனின் அருள்பெற்று இப்புவியிலேயே மிகச்சிறந்த அறிவுள்ளவர்களாக திகழ்ந்தவர்கள் இப்பாரத பூமியில் வாழ்ந்தவர்கள். இன்று உலகில் பலநாட்டினர் தம்மைத் தாமே தலை சிறந்த அறிவாளிகள் என்று கூறுபவர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களில் பாரதமக்கள் பெற்றிருந்த அறிவில் சிறு பகுதியையேனும் எட்டிப்பிடித்தவர் எவரும் இலர், இன்று வரை. ஆன்மீகத்திலே நுண்ணிய ஆராய்ச்சி செய்து பல நுணுக்கங்களை உணர்ந்திருந்தவர் பாரதத்தவர். இதில் இறைவனை அறியும் தந்திரம் முதல் வரும்முன் நோயை தடுத்திடும் செய்முறை வரை நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், உணவுகளிலும் சேர்த்து ஒரு முதிர்வுடைய நாகரிகத்தை உருவாக்கியவர்கள். நம் நாகரிகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவை யாவும் ஆராய்ந்து அறிந்து, உணர்ந்து பயன்பெற்று, பிறர்க்கும் உணர்த்துவது நம் கடமையாகும்.

நம் நாகரிகத்திற்கும் இறைநம்பிக்கைக்கும் எப்போதும் சோதனைகள் வந்து பின் மறைந்த வண்ணமே இருந்தன. மேலை நாட்டினர் நம் நாகரித்தை உருக்குலைத்து அவர்கள் பின்னே நம்மை அலையவிடும் அவலத்தை இன்று நாம் காண்கிறோம். இந்த மாயையிலிருந்து நாம் விடுபட்டு மீண்டும் அதே அறிவு முதிர்வுநிலையை எட்டவும், நம் நாடும் உலகமும் எல்லா துறைகளிலும் உயர்வடையவும் அவனின் திருவருள் பொங்கிவழிகிறது. அதை உணர்ந்து அவன் நாமத்தை ஓதி அவனை சரணடைவோம். ஓம் நமசிவாய.

பொருளுணர்ந்து சொல்வோம்

புரிந்து கற்காத கல்வியினால் எந்தவித பலனும் இல்லை. கற்பதின் நோக்கமே உலக இயல்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நம் வாழ்வை உயர்த்திக் கொள்வதே. ஆங்கில வழி பாடதிட்டத்தினாலும், வணிக நோக்கில் வழிநடத்தப்படும் பள்ளிகளினாலும் இன்று பெரும்பாலானோர் புரியாமலேயே கல்வி கற்று பின்னர் பற்பல இன்னலுக்கு ஆளாகின்றனர். இனியாவது, முடிந்த அளவு நாம் கற்பதை என்ன என்று தெளிவுற அறிந்து கற்போம். அறிந்து கற்றதை நம்மை சுற்றியுள்ள பிறர்க்கும் சொல்லிடுவோம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்று மாணிக்கவாசகரே 92 வது வரியாக தம் சிவபுராணத்திலேயே கூறுகிறார். மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை புரிந்துகொண்டு, சிவனின் அருளை அனுபவிப்பதே, இந்த எழுத்தின் ஒரே நோக்கமாகும். ஆகையினால், நீங்களே இந்த செய்யுளை வாசித்து புரிந்து கொள்ள முயலுங்கள்.

சில முக்கிய தத்துவங்கள்

பாடலைப் புரிந்து கொள்ளும் முன், சில தத்தவங்களை உணர்ந்திருப்பது அவசியம். அவ்வாறு அறிந்திருந்தால் தான் அதன் தத்துவங்களை உணர்ந்தறிய முடியும்.

பிறவி

ஆத்மா அழிவற்றது. அது அழியும் உடலில் புகுந்து இயக்கம் பெருகிறது. ஒரு பிறவியில் வாழ்ந்து, உடல் அழிந்து, விடுபட்டு மீண்டும் வேறொரு உடலில் புகுந்து வாழ்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. இது இறைவனின் திருவடியை அடைந்த பின்னரே அமைதியுறும். அதுவரை சுழன்று கொண்டே இருக்கும். பிறவி அல்லலுற்றது. பிறவி துன்பகரமானது. ஒருவன் மீண்டும் மீண்டும் பிறவாது இறைவன் அடி சேர வேண்டும். அதற்கு அவன் இறைவனை நாடி அவன் அருள் பெற வேண்டும். புண்ணியம் செய்ய வேண்டும். அந்த இறைவனே நம் பிறப்பறுக்க உதவுகிறான். ஆகவே, தன் வாழ்நாளில் ஒருவன் தூய்மையாக வாழ்ந்து இறைவனை நாடி அவன் திருவருள் பெற்று மீண்டும் பிறவாத வரம் பெற்று அவனின் திருவடி சேர்வதையே நோக்கமாக கொள்ள வேண்டும். இதையே வள்ளுவரும்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.
என்கிறார்.

செயல்வினை

ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் வினையின் (நல்ல வினைகளும், கெட்ட வினைகளும்) பலன்கள் ஒவ்வொரு பிறவியாக அவனைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த வினைகள் யாவும் ஓய்ந்து பிறவாமை என்ற வரம் வேண்டுமானால், அது இறைவனாலே மட்டுமே நமக்கு அருள முடியும்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்

இந்த உலகமும் பேரண்டமும், அடிப்படையில் ஐந்து வகை பொருள்களினால் ஆனது. மண்ணும் அதில் மறைந்திருக்கும் தாதுப்பொருட்களும் ஏராளம். இது திடப் பொருளாகும். உயிரினங்களின் உடலாகிய எழும்பு சதை நரம்புகளும் இந்த திடப்பொருளினால் ஆனது. நீரின்றி அமையாது உலகு என்றார் ஔவை பிராட்டி. திரவ நிலை கொண்ட பொருட்களும் இந்த அண்டத்தில் பங்குபெறும் மிக முக்கியமான கூறு.தட்பவெட்பம் எனப்படும் சூடு. வெப்பம் இல்லாத நிலையை குளிர்ச்சி என்கிறோம். இந்த வெப்பம் எங்கும் நிறைந்திருக்கிறது.
காண முடியாத முக்கியமான அம்சம் இந்த காற்று. இதை உணர முடியும் ஆனால், பார்க்க முடியாது. உயிரினங்களின் வாழ்க்கைக்கு முக்கிய காரணி.
எங்கும் பரவியிருக்கும் வெற்றிடம் அல்லது ஆகாயம் அல்லது பரவெளி. இதன் முதலும் முடிவும் மனிதனால் இன்னும் அறியமுடியாத ஒன்று.
இந்த ஐந்து மூல கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து கலவையாக இந்த பேரண்டத்தை இயக்கி வருகிறது. இவை யாவும் தங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருந்தால் தான் இந்த உலகம் உய்யும். இந்த உலகம் உய்தால் தான் இறைவனை அறிந்து அவனை சரணடைய முடியும். இந்த ஐந்து மூலக்கூறுகளையும் ஒவ்வொரு எழுத்தினால் நாம் குறிப்போமேயானால், மண்ணை ‘ந’ என்ற எழுத்தினாலும், தண்ணீரை ‘ம’ என்ற எழுத்தினாலும், வெப்பமாகிய அக்னியை ‘சி’ என்ற எழுத்தினாலும், காற்றை ‘வ’ என்ற எழுத்தினாலும், ஆகாய பரவெளியை ‘ய’ என்ற எழுத்தினாலும் குறித்து, இதை இணைத்தால் வருவது நமசிவாய. இந்த நமசிவாய வாழ்ந்தால் தான் நாம் இறைவனை உணர்ந்து அவனை அடையமுடியும். ஆகவே நமசிவாய வாழ்க. நாதன் (தலைவன்) தாள் (திருவடி) வாழ்க.

சொல்லும் பொருளும்

தாள் - திருவடி
கோகழி – திருவாவடுதுறை
குருமணிதன் – குருவாகிய மாணிக்கம்
ஆகமம் – வேதம்
ஏகன் – ஒருவன்
பிஞ்ஞகன் – சிவபிரான்
கழல் – பாதம், திருவடி
சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்
கோன் – அரசன்
சீரார் பெருந்துறை – திருப்பெருந்துறை
தேசன் – ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் – நெற்றிக் கண்ணை உடையவன் (சிவபெருமான்)
நுதல் – நெற்றி
மிக்காய் – கொண்டுள்ள(வன்)
நேயம் – அன்பு
நிமலன் – அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் – செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு….
விருகம் – மிருகம்
வீடுபேறு – மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை – காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் – காளை வாகனமுடைய சிவன்
இயமானன் – யாகம் செய்விப்பவன்
பெம்மான் – சிவன்
கன்னல் – கரும்பு
தேற்றனே – தெளிவானவனே
குரம்பை – உடல்

செய்யுளும் பொருளும்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க

நமச்சிவாய வாழ்க – இறைவனின் தத்துவமான நமசிவாய என்றும் வாழ்வதாக.
நாதன் தாள் வாழ்க – ஒலித்தத்தவத்தின் வடிவாய் திகழும் சிவபெருமானின் திருவடி வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் – திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கம்
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் – வேதங்களாகவே நின்று அருளுபவன்
ஏகன் அநேகன் – தானே ஒருவனாகவும், பலருமாகவும் காட்சிதருபவன்

வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க
வேகம் கெடுத்தாண்ட – அலைபாயும் தன்மை கொண்ட மனத்தின் வேகத்தை அடக்கி ஆட்கொண்ட
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் – பிறப்பை அழிக்கும் சிவனின் திருவடி வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் – சிவனை அறியாதவர்க்கு தூரத்தில் இருப்பவன்
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் – கைகளை குவித்து வணங்குபவரின் உள்ளத்தில்
மகிழ்ந்து இருக்கும் அரசனின் திருவடி வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் – தலைதாழ்ந்து வணங்குபவரை உயர்ந்த நிலைக்கு
ஓங்கச் செய்யும் பெருங்குணம் கொண்டவன் திருவடி வெல்க

ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி

எந்தை அடி – எமக்கு தந்தையாக விளங்கும் சிவனின் அடி போற்றி.
தேசன் அடி – ஒளிமயமானவனின் திருவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் - அன்பே உருவானவன், அழுக்கற்றவன் (நிமலன்) திருவடி போற்றி.
சீரார் பெருந்துறை நம் தேவன் – திருப்பெருந்துறையில் இருந்து அருள்தரும் நம்முடைய தேவன்
அடி போற்றி.

ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால்
அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான்


ஆராத இன்பம் – அளவில்லாத இன்பம் அருளும் மலை போன்றவனே போற்றி
முந்தை வினை முழுதும் ஓய – முன்னால் செய்த அனைத்து நல்ல கெட்ட வினைகளின் பலன்கள் அழியும் வண்ணம் சிவாய நம என்று உன் நாமத்தை நான் உரைப்பேன்.

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்


கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி – நெற்றிக் கண்ணை உடைய சிவன் தன் கருணையை காட்டியதால் இங்கு வந்து
எண்ணுதற்கு எட்டா எழிலாற் – எண்ணத்தில் கற்பனை செய்து பார்க்க இயலாத பேரழகை கொண்டவனுடைய
கழல்இறைஞ்சி – சிவனின் திருவடி வணங்கி
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் – வானம் பூமி என்று எங்கும் பரந்து நிற்கும்
விளங்கொளியாய் – ஒளியாய் விளங்குபவனே
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் – எண்ணிப்பார்த்து அளவிடும் எல்லை இல்லாதவனே நின் பெரிய இயல்புகொண்ட
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் – பொல்லாத வினைகள் புரிந்து உளன்று கொண்டிருக்கும் நான் புகழ் அடைவது எப்படி என்று அறியாமல் இருக்கிறேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்


விருகம் – மிருகம்.
புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், கணங்கள், அசுரர், முனிவர், தேவர், தாவரம் – இத்தனை வித பிறப்புகள் உள்ளன.

எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


கண்டுஇன்று வீடுற்றேன் – உன் திருவடிகளை இன்று நான் கண்டு பிறவாத வீடுபேற்றை அடைந்தேன்.
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள் – உண்மையானவனே, வெற்றியுடையவனே, காளை வாகனத்தவனே,
ஆழ்ந்தகன்ற நுண்ணியனே – அளவிட முடியாத ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே


வெய்யாய் – வெப்பமாய்; தணியாய் – குளுமையாய்
இயமானனாம் விமலா – யாகம் செய்விக்கும் தூய்மையானவனே
பொய்யான மாயைகள் எல்லாம் என்னிருந்து தூர போய் அகல, வந்து அருளி, மெய்ஞானம் ஆகி ஒளிர்கின்ற உண்மைச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் – எந்த ஞானமும் இல்லாதவனாக இருக்கிறேன்
அஞ்ஞானம் என்ற இருளைப் போக்கும் நல்ல அறிவாகவும் இருக்கும் சிவனே

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே

தோற்றம், முதலும் இறுதியும் உள்ள அளவு இல்லாதவனே,
போக்குவாய் – மாயையை போக்குவாய்
என்னை புகுவிப்பாய் நின்தொழும்பின் – உன்னைத் தொழும் அடியார்கள் கூட்டத்தில் என்னை புகவைப்பாய்
நாற்றத்தின் நேரியாய் – நறுமணத்தின் நுண்மையிலும் இருப்பவனே
சேயாய் நணியானே – நம்பாதவர்க்கு தூரத்தில் இருப்பவனே, நம்பிய அடியவர்க்கு பக்கத்தில் இருப்பவனே.
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே – சொல்லும் மனமும் கடந்து வேதபொருளாய் நிற்பவனே

கறந்தபால் கன்னலொடு, நெய் கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள், தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும், எங்கள் பெருமானே


கன்னல் – கரும்பு.

நிறங்கள் ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான், வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய, மாய இருளை
அறம்பாவம் என்னும், அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும், புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது, வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும், வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்


விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க
மறைந்திருந்தாய் எம்பெருமான் – தேவர்கள் உன்னை துத்திபோதும் அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே மறைத்து நின்றாயே
மறைந்திட முடிய இருளை…. – கடுமையான வினைகளில் சிக்கியிருக்கும் என் உடலினுள், அறியாமை, ஆணவம் போன்ற மாய இருளை மூடி மறைத்தும், அறம் பாவம் என்ற விதிகளால் கட்டியும், அதை வெளிப்புற அழுக்கு நிறைந்த தோலினால் மூடி, அந்த உடலுக்கு மலத்தை வெளியேற்றும் ஒன்பது துளைகளையும் வைத்து, அதிலிருக்கும் ஐந்து புலன்களும் உன்னை அறியவிடாமல், என்னை ஏமாற்றும் செயலை தொடர்ந்து செய்ய, இறுகிய விலங்கு போன்ற மனத்தினால் மட்டுமே என்னால் இதை வென்று உன்னை அறிந்து சரணடைய முடியும்.

கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க், கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த, தயாவான தத்துவனே

அன்பினால் உன் நினைவினில் கலந்து, உன்னையே எண்ணி உள்ளத்தினால் உருகும், இந்த நோய் தாக்கக்கூடிய உடலையுடைய இந்த சிறியேனுக்காக, நாயை போன்று உன்னை காண காத்திருக்கும் எங்களுக்கு, இந்த நிலமாகிய பூமியில் வந்தருளி, உன் திருவடிகளை எனக்கு காட்டி அருள்புரிபவனே. இவ்வுலகிலேயே தாயின் அன்பு தான் மிகப்பெரியது. அந்த தாயினும் மிகுதியான அன்பை உடைய தத்துவமானவனே

மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார், அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப், பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சங்கெடப்


மாசற்ற – குற்றமில்லாத.
பாசமாகிய பற்றினை அறுத்து அருள் புரியும் அறிவில் சிறந்தவனே.
உன் அருளினால் என் நெஞ்சில் இருக்கும் வஞ்சனைகளை ஒழிகின்றன.

பேராது நின்ற, பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும், இல்லானே உள்ளானே


பேராது நின்ற – என் உள்ளம் அகலாது நின்ற
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே – முயற்சியற்றவரின் உள்ளத்தில் வெளிவராமல் மறைந்திருக்கும் ஒளியானவனே

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்


ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே – முதலும், முடிவும், இடையிலுமாகி இருப்பவனே.
கூர்மையான மெய்ஞானத்தினால் உன்னை உணர்வபரின் கருத்தில் நிற்பவனே.

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே
போக்கும் வரவும், புணர்வும்இலாப் புண்ணியனே
காக்கும் எம்காவலனே, காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா மிக்காய்நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச், சொல்லாத நுண்உணர்வாய்


நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே – கூர்மையாக ஆராய்ந்து அறியும் அறிவே, நுணுக்கமான பொருளையும் உணர வல்ல நுட்பமான உணர்வே
போக்கும் வரவும், புணர்வும் இலாப் – செல்வதும், வருவதும், கலப்பதும் இல்லாத.
அத்தா மிக்காய்நின்ற – அப்பா, மிகுதியாக நின்ற
ஒளிவீசும் சுடரான இருப்பவனே, சொல்லப்படாத நுட்பமான உணர்வாகவும் இருப்பவனே

மாற்றமாம் வையகத்தின், வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார், அமுதே உடையானே
வேற்று விகார, விடக்குடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று


மாறிக்கொண்டே இருக்கும் உலகில், வெவ்வேறு விதங்களில் மெய்யறிவாக வருபவனே.
தேற்றனே – தெளிவானவனே
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே – உண்பதற்கு அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே
வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப – பல்வேறு விகாரங்களை உடைய இந்த உடம்பின் உள்ளே கிடந்து
ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று – இயலவில்லை தலைவா, அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து, வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக், கட்டழிக்க வல்லானே
நள்இருளில் நட்டம், பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே


உம்மைப் போற்றிப் புகழ்ந்து, தம்முடைய பொய்கள் கெட்டு உண்மையான அடியவரானார்.
அவரை மீட்டு இந்த உலகுக்கே மீண்டும் கொண்டுவந்து பிறவியில் சிக்க வைக்காது
குரம்பை – உடல். மாயையால் ஆன இந்த உடலின் மீண்டும் மீண்டும் பிறக்கும் அடித்தள தன்மையை அழிக்க வல்லவனே.

அல்லல் பிறவி, அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சொல்லற்கு அரியானை – சொல்வதற்கே அரிய சிவபெருமானை.

திருச்சிற்றம்பலம்.
நமசிவாய. சிவசிவ சிவசிவ.

நன்றி: வெல்க தமிழ்.

மதிப்பிற்குரிய சூலமங்கலம் சகோதரிகள் இசைத்த இந்த சிவபுராணத்தை கேட்பதற்கு கண்டிப்பாக புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவசிவ.