முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

வெள்ளி, 22 ஜூன், 2012

முதல்வனே உன் திருவடி சரணம்



               ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
               இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
               நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
               புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
.

கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்று கூறினால் மிகையாகாது. அனைத்துக்கும் முதல்வனான அந்த ஓம்கார கணபதியை வணங்கி என் சைவ திருதொண்டை துவங்குகிறேன்.

சைவ திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக அமைந்திருக்கும் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் விநாயகர் காப்பாக இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் தான் என் குழந்தை பருவத்தில் நான் முதலில் கற்ற பாடல்.

ஐந்து கரங்களை உடையவனும், ஆனை முகத்தைக் கொண்டவனும், சந்திரனின் இளமையான பிறையைப் போன்ற தந்தங்களை கொண்டவனும், சிவனுக்கு மகனாகவும், ஞானத்தின் உச்சநிலையாக உள்ளவனுமாகிய முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து அவரது திருவடிகளை போற்றுகிறேன்.