முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

உலகம் புகழும் நூல் ? யாரைப் பார்த்து அஞ்சுவேன் நான் ? முழுமுதற்கடவுள் யார் ? அன்பே சிவமா ?

Whatsapp copy pastable Shiva Shaivism news  2

வாட்சேப்பில் அனுப்பக்கூடிய சைவ சிவ செய்திகள் தொகுப்பு 2

திருச்சிற்றம்பலம்.

உலகம் புகழும் நூல்.


உத்தரகோச மங்கை என்னும் தலத்தில் சிவபெருமான் ஆயிரம் முனிவர்களுக்கு சிவாகமம் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர்,  ""முனிவர்களே... என் சிறந்த பக்தை "ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரி' என்னை அழைக்கின்றாள். நான் இலங்கை செல்கிறேன். இலங்கையை நான் அடைந்தவுடன், இந்தக் குளத்தில் ஒரு ஜோதி தோன்றும். நான் திரும்ப வரும் வரை "இந்த சிவாகம நூலை பத்திரமாக வைத்திருங்கள்' என்று முனிவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
சிறிது நேரம் சென்ற பின் அவர் சொன்னபடியே "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படும் அந்தக் குளத்தில் ஒரு பெரும் ஜோதி எழுந்தது.  அந்த ஜோதி கண்ணுக்கு இனியதாக,தேன் மணம் கமழ்வதாக, வெப்பமே வீசாத ஒரு அதி அற்புத ஜோதியாகத் திகழ்ந்தது.

வசீகரமான அந்த ஜோதியில் ஈர்க்கப்பட்ட முனிவர்கள் ஒவ்வொருவராக அந்த ஜோதியில் கலந்து வீடு பெற்றனர்.  கடைசியில் கலக்க இருக்கும் ஒரு முனிவர், அடுத்திருந்த ஒரு இளைய முனிவரிடம் ""அப்பனே... இது இறைவன் அருளிய சிவாகமம்; இலங்கை சென்ற அவர் திரும்ப இங்கு வருவார்; அவரிடம் சேர்த்துவிடு'' என்று கூறி அவரும் ஜோதியில் கலந்துவிட்டார்.
ஆண்டுகள் பல சென்றுவிட்டன. வண்டோதரியின் பக்தி வெள்ளத்தில் தன்னை மறந்த பெருமான், அவளுக்கு அருள் புரிந்து மீண்டும் உத்தரகோசமங்கை வந்தார்.

அக்னிதீர்த்தக் கரையில் இளம் முனிவர் ஒருவர் மட்டும் "சிவாகம' நூல் வைத்திருப்பதைப் பார்த்தார். அனைத்தையும் உணர்ந்த சிவபெருமான் அந்த இளம் முனிவரை அன்புடன் தழுவி, ""கடமை தவறாமல் காத்திருந்து என் வாக்கைக் காப்பாற்றிய நீ அடுத்த பிறவியில் பாண்டிநாட்டில் அவதரித்து உலகமே புகழும் ஒரு தோத்திர நூல் தருவாய்'' என்று ஆசிகள் மொழிந்து மறைந்தார்.

அந்த இளம் முனிவரே மாணிக்கவாசகராகத் தோன்றி மாநிலம் புகழும் திருவாசகம் அருளியவர். அவர் திருக்கையில் தவழும் நூல் சிவாகமம்.

திருச்சிற்றம்பலம்.

--------------

http://www.maalaimalar.com/2015/09/23144659/shiva-lingam-worship.html

திருச்சிற்றம்பலம்.

சிவாகமப் பொருள் அறிவோம்.


சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு உரிய ஆதார நியமங்கள் முறைகளைக் கூறுவதே சிவாகமம். இருபத்தெட்டு வகைகளாக உலகிற்கு அளித்தவர்கள் ஐந்து முனிவர்களான கவுசிகர், காசிபர், பரத்வாஜர், கவுதமர் ஆகியோர் இவர்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களான ஈசானம் தத்புருஷம், கோரம், வாமதேவம், சத்யா ஜாதம் என்ற ஒவ்வொரு திருமுகங்கள் வழியாகக் கேட்டறிந்து,

காமிகம் முதல் வாதுளம் வரை ப்ரணவர், சுதாக்யர், சுதீர்த்தர், காரணர், சுசிவர், ஈசன்குக்குமர், காலர், அம்பி, தேசிகர் ஆகியோர் மூலம் பரவியது. ஆகமம் என்பதற்கு சிவபெருமானை பூஜை செய்கிற விதிகள் சிவபோதனை நூல்கள் எனினும் சைவர்கள் இதை-ஆ-சிவஞானம்-க-மோட்சம், ம-மலநாசம் என்றும் கூறுகின்றனர். மேலும் பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருட்களைக் கூறுவதே ஆகமம் என்று சைவ மறையவர் பொருள் கொள்வர்.

சிவாகமத்தை விவரிக்கும் ஆகம விதி நூல்களில் ஒன்றான 28-வது வாதுன ஆகமத்தில் சொல்லப்பட்ட உண்மையான பொருள் இதுவே. ஆகமம் என்ற சொற்கோர்வையின் பொருள். ஆ-ஆகதம் சிவபத்ராஸ்ச - சிவபெருமானின் வாக்கிலிருந்து வந்தது. க-கதம்து கிரிஜா சுகதென - கிரிஜா என்ற பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டது. ம-மதஞ்ச வாசுதேவஸ்ச - வாசுதேவன் என்ற மகா விஷ்ணு இது தன்னுடைய மதம் என்று ஏற்றுக் கொண்டது.

தஸ்மாத் ஆக - ஈரித:- இம்மூன்று முதல் எழுத்துக்களும் உணர்த்தும் பொருளே சிவாகமம் ஆகிறது. 28 ஆகமங்களில் முதல் 10 சிவபேதம் என்றும் மற்ற 18-ம் ருத்ரபேதம் என்றும் வகைப்படுத்தப்பட்டு அவற்றில் சிவாகம ரகசியங்கள் அடங்கி உள்ளன. 28 வகை ஆகமங்களாவன. காமிகம், யோகஜம், சிந்தயம், காரணம் அஜிதம், தீப்தம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதகம், விஜயம், தைவ நிஸ்வாசம், ஸ்வயம்புவம், அத்நலம், வீரம், ரவுரவம், மகுடம், விமலம் சந்திரக்ஞானம், பிம்பம், ப்ரோத்ஹீதம், லலிகம், சித்தம், சந்தானம் சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம்.

---------------------

திருச்சிற்றம்பலம்.

அன்பே சிவம் - இது சரியானதா ?



அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
                                                 -திருமந்திரம் 270-

அன்பே சிவம் என்று பலரும் பல இடங்களில் சொல்கிறோம். பல சமயப் பிரசாரகர்களும்கூட அன்பே சிவம் என்று பேசியும், எழுதியும் வருவதையும் பார்க்கிறோம். இந்த வரி மேற்சொன்ன திருமந்திரப் பாடலில் வருகின்றது. இதை கடவுள் அன்பு வடிவானவர் என்ற பொருளிலேயே புரிந்து கொண்டிருக்கிறோம்; இவ்வாறே சொல்லியும் வருகின்றோம். நமது பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில் இவ்வாறு சொல்லியிருப்பது பற்றி நமக்கு சற்றுப் பெருமையும் கூட. மனித நேயம் பேசும் நவீன உலகில் அன்பே சிவம் என்று நமது சைவத்தில் கூறியிருக்கின்றது என்று கூறி நம்மையும் இந்த மனித நேயவாதிகளுடன் சேர்த்து அடையாளம் காட்டப் பிரயத்தனம் பண்ணுகிறோம்.

கிறிஸ்தவம் கடவுள் அன்பு வடிவானவர் என்று சொல்கின்றது. இஸ்லாம் அளவற்ற அன்பாளன் என்று இறைவனைச் சொல்லுகின்றது. ஆயினும் சைவத்தில் கடவுள் அன்புள்ளவர்; அன்பே வடிவானவர் என்று சொன்னால் உண்மையில் அது கடவுளுக்கு ஒரு குறையாகவே கருதப்படும்.
ஒருவர் இன்னொருவர் மாட்டு ஒரு எதிர்பார்ப்புடன் செலுத்தப்படுவதே அன்பு. நாம் சகமனிதர்கள் மேல் காட்டுவது அன்பு. பக்தர்கள் இறைவன் மாட்டுச் செலுத்துவது அன்பு. இவை எல்லாம் வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ ஒரு எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். கணவன் மனைவியிடம் அன்பு செலுத்துகிறான் என்றால் அவளின் அன்பையும், கவனிப்பையும் அதற்கு பிரதிபலனாக எதிர்பார்க்கிறான். ஒரு தலைக் காதலின் வலி என்ன என்பது உங்களுக்குப் புரியும். நீங்கள் இன்னொருவர் மீது அன்பு செலுத்தியும், இன்னொருவர் உங்கள் மீது அன்பு செலுத்தவில்லையானால், அந்த அன்பு முழுவதும் வேதனையாகத் திரும்பி வந்து நம்மைத் தாக்கும். ஒரு தாய் தனது பிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள் என்றால் பிள்ளையின் பாசத்தையும், சந்தோசத்தையும் பிரதிபலனாக எதிர்பார்க்கிறாள். இதேபோல நாம் இறைவனிடம் காட்டுகிற அன்பு அவனின் அருளையும், கவனிப்பையும் வேண்டி நிற்பதால் இதுவும் ஒரு எதிர்ப்பாரப்பைக் கொண்டதாகும்.

இறைவன் நம்மாட்டு செலுத்துவது அல்லது காட்டுவது அன்பு அல்ல; அது அருள் ஆகும். அருள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. மேலான ஒருவரால் கீழான நிலையில் உள்ளவரிடத்துக் காட்டப்படுவது அருள். அது இறைவனுக்கு மட்டுமே உரியது. இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையதாய் இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகும். இறையுடன் ஒன்றிய மெய்யடியார்களுக்கும் இறையினுடைய இயல்புகள் பொருந்தி வருவதால் இல்லறத்தாருக்கு அன்பை வலியுறுத்திய திருவள்ளுவர், துறவிகளுக்கே அருளை வலியுறுத்துகிறார்.

அப்படியானால் மேற்சொன்ன திருமந்திரப் பாடலுக்கு என்ன பொருள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அங்கு அன்பு என்பது அன்பு செலுத்தும் அடியார்களைக் குறிக்கின்றது. இதை ஆகு பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவர். கீரை விற்பவளை கீரை என்று அழைப்பது போல இறைவனிடம் அன்பு செலுத்தும் அடியார்களை அன்பு என்று குறிக்கின்றது இப் பாடல். இப்போது இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் - மெய்யடியார்களும் இறைவனும் வேறு வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள்..

அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் - மெய்யடியார்கள் சிவமாக ஆவதை யாரும் அறிவதில்லை.
இதையே மாணிக்கவாசகர் " சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட" என்று திருவாசகத்தில் பாடுகின்றார். இதையே "அவனேதானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி" என்று சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம் சொல்லுகின்றது. " தன்னையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன்"  என்று சிவஞான சித்தியார் இதனைக் கூறுகின்றது. "தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சத்தி"  என்று இதனை திருவருட் பயன் கூறுகின்றது. இது சைவ சித்தாந்தம் கூறும் ஆன்மா சிவமாகி இருந்து அனுபவிக்கும் சுத்த அத்துவித முத்தி நிலையைக் குறிப்பதாகும்.
இதையே திருமூலர் திருமந்திரத்தின் இன்னொரு பாடலிலே பின்வருமாறு கூறுகின்றார்.

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராதாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த முத்தியே
                                         -திருமந்திரம் 1437-

இதுவே வேத உபநிடத மகாவாக்கியங்களின் பொருளுமாகும்.

அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரம்மம் என்பதல்ல, நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பதே இதன் பொருள். அஸ்மி- இருக்கிறேன்.
தத்துவ மஸி - நீயே அது என்பதல்ல, நீயே அதுவாக ஆகிறாய் என்பதே பொருள். அஸி- ஆகுதல்.

அன்பே சிவமாவது - அன்பே சிவம் அல்ல, அன்பை சிவம் ஆவது என்று பொருள். அன்பு - அன்பு செய்கின்ற மெய்யடியார். .

அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் - மெய்யடியார்கள் இறுதியில் சிவமாகவே ஆகும் ஏகநிலையில் இறையுடன் கலப்பர் என்ற உண்மையை அறிந்த பின்னர்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - தாமும் அந்த ஏகபோகநிலையில் சிவமாய் ஆகி அமர்ந்நதிருப்பர்.
இந்த பாடலில் எல்லா இடத்திலும் அன்பு என்று சுட்டப்படும் அடியார்கள் சிவமாவது பற்றியும், சிவமாய் அமர்வது பற்றியும் கூறப்படுகின்றது. இதை அன்பே சிவம் என்று பொருள் கொண்டால் அது சங்கரர் கூறும் அத்துவித நிலை ஆகும். ஆயினும் இங்கு "சிவம் ஆவது",  "சிவமாய்" என்ற சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இடர் ஏற்படுகின்றது. இதுவே சங்கரர் கூறும் அத்துவித நிலைக்கும் சைவ சித்தாந்தம் கூறும் அத்துவித நிலைக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு. முன்னதைக் கேவலாத்துவிதம் என்றும் பின்னதைச் சுத்தாத்துவிதம் என்றும் கூறுவர்.
எவ்விதமாய்ப் பார்த்தாலும் இங்கு அன்பு என்பது அடியவர்களைக் குறிக்கின்றதே அன்றி இறைவன் அன்பு வடிவானவர் என்று அபசாரமாகக் குறிக்கப்படவில்லை.

ஆகவே, இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையது. இது இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகின்றது.

திருச்சிற்றம்பலம்.
 -----------------

திருச்சிற்றம்பலம்.

சிலந்தி அரசனான வரலாறு


மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே. ஆனால் ஏனைய பிறவிகள் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உடல், கருவிகள், உலகம், அனுபவங்கள் வாயிலாகப் பக்குவ முதிர்ச்சி பெற்று பின்னர் மேலான மனிதப்பிறவியில் பிறந்தே இறையை அடைதல் வேண்டும். ஆனாலும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. ஈ இறைவனை வழிபட்டு நற்கதி அடைந்த தலம் ஈங்கோய் மலை. யானையும் சிலந்தியும் வழிபட்டு நற்கதி அடைந்த தலம் திருவானைக்கா. திருவிளையாடற் புராணத்தின் நாரைக்கு உபதேசித்த படலமும், கரிக்குருவிக்கு முத்தி கொடுத்த படலமும் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த படலமும் விலங்குகள், பறவைகள்கூட இறையை அடைவதற்கும் புண்ணிய பாவ காரியங்களுக்கும் விதி விலக்கல்ல என்று நமக்கு கூறுகின்றன.

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.
          இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

           இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை 'ரெக்தாக்ஷ சோல' என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

பெரியாழ்வார், நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப் பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
                                   - திருநாவுக்கரசர் தேவாரம்-

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.


-------------------------

திருச்சிற்றம்பலம்.

நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு எது ?

பசியோடு இருக்கும் உயிர்களுக்கு உணவிடுவது மிகப்பெரிய பரிசு. அன்னதானம். ஏழை பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், முதலாளி, தொழிலாளி என்று எந்த பாரபட்சம் பாராமல் உணவிடுவது மிகப் பெரிய பரிசாகும். அந்த பசி நீங்கியவுடன் அந்த பரிசின் நோக்கம் நிறைவு பெற்று விடுகிறது. இதே போல் தான் ஒருவனுக்கு காலத்தினால் செய்த உதவி இந்த உலகத்தை விட மிகப் பெரியது என்கிறார் வள்ளுவர் பெருமான். எல்லா பொருளுதவிகளும் அதன் குறிக்கோளை எட்டியவுடன் நிறைவடைந்து விடுகிறது. இவை யாவும் இந்த உலகின் வாழ்வியலுக்கு தேவையானவற்றையே மையமாக வைத்து நிற்கிறது.
ஆனால், பல பிறவிகளில் பாவம் செய்து மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று கொண்டிருக்கும் ஒரு ஆன்மாவிற்கு சிவத்தை பற்றி அறிவித்து, சிவஞானத்தை அறியப்படுத்துவது என்பது அந்த ஆன்மாவிற்கு இறைவன் திருவடி நிழலை அடைய செய்வதற்கு வழிகாட்டுவதாகும். இதை விட சிறந்த ஒரு பரிசை நீங்கள் ஒருவருக்கு கொடுக்க முடியாது. ஏக இறைவனை உணர்ந்து அவனை துதித்து அவன் அருள் பெற்று சரியான திசையில் செல்லும் போது, துன்பம் எல்லாம் மறைந்து போகும். இன்பம் நிலைப்பெறும். உங்களை ஒரு படியாக வைத்து இன்னொருவர் சிவனை அடைந்தால், அதை விட பேறு வேறென்ன இருக்க முடியும் ?
ஆகவே, நாம் கற்ற சில செய்திகளை நாம் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். நம் குடும்பத்தோடு உரையாடுவோம். நம்மால் இயன்ற நல்ல செய்திகளை பிறருக்கும் சொல்வோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மால் இயன்ற அத்தனை நல்ல செயல்களை செய்வோம். மனிதராக பிறந்துள்ள நமக்கு, நன்மைகள் செய்ய,  இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
சிவஓம். திருச்சிற்றம்பலம்.

------------------
 
 திருச்சிற்றம்பலம்.


தொப்புள் இல்லாத ஒரே ஒருவன்.
தாய் தந்தை இல்லாத அனாதை.
பிறப்பு இல்லாதவன்.
இறப்பு இல்லாதவன்.
பிஞ்ஞகன், அணுவிலும் உறைபவன்.
முதலும் முடிவும் இல்லாதவன்.
பேரண்டத்தை உடைய ஈசுவரன்.
காலத்தை வென்றவன்.

மூன்று காலங்களிலும் உறைபவன்.
எல்லா உலகங்களுக்கும் தலைவன்
எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.

மலம் அற்றவன்.
முக்கண்ணன்.
ஒருவனாகவும், அநேகனாகவும் இருப்பவன்.

தாயினும் சிறந்த தத்துவன்.

ஐந்து தொழில்களை உடையவன்.
ஐந்து நிறங்களை உடையவன்.
உடல் முழுவதும் வெண்ணீறு பூசியவன்.
அருட்பெரும் ஜோதிப்பிளம்பாக நின்றவன்.
எதிலுமே அகப்படாதவன்.
தன்னைக் காட்டிக்கொள்ளாதவன்.

உள்ளிருந்து உணர்த்துபவன்.

ஆனந்த கூத்தாடிக் கொண்டே இருப்பவன்.
பிறவி அறுக்கும் தன்மை கொண்ட ஒரே பெம்மான்.
எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
எல்லையற்ற கருணை உள்ளவன்.
அன்பை பெற்று அருளைக் கொடுப்பவன்.
கேட்டவர்க்கு கேட்ட வரத்தை கொடுக்கும் பித்தன்.
அடியவர்களின் உள்ளத்தில் உறைபவன்.
அவன் தன்மைகள் அனைத்தையும் நம் வாயால் பட்டியலிட்டு சொல்லிவிட முடியாத ஒரே ஒருவன்,

இத்தனை குணங்களும் கொண்ட ஒரே ஒருவன் நம் தலைவன் சிவபெருமான் ஒருவனே. நமக்கு கிடைத்துள்ள அற்புத மனித பிறவியின் அற்ப வாழ்வின் நேரத்தை, அவனை பணிந்து பூவும் நீரும் கொண்டு ஏத்தி போற்ற பயன்படுத்துவோம். திருநீறு ஆனந்தமாக நெற்றி நிறைய இடுவோம். கண்டமணி ருத்ராட்சம் அணிவோம். பஞ்சாட்சர மந்திரம் சொல்லிக்கொண்டே இருப்போம். நன்மை பரவட்டும்.உலகம் செழிக்கட்டும். உயிர்கள் உய்யட்டும்.

திருச்சிற்றம்பலம்.
----------


திருச்சிற்றம்பலம்.

முழுமுதற் கடவுள் யார் ?

 
இதை முழுவதும் கண்டிப்பாக படிக்கவும்.

உங்களுக்கு ஒரு நிறுவனத்தில் அதன் தலைவரை மிக நன்றாகத் தெரியும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மேலாளரையும் மற்றும் கடைநிலை ஊழியரையும் நன்றாகத் தெரியும். இப்போது உங்களுக்கு மிக மிக முக்கியமான ஒரு வேலை அந்த அலுவலகத்தில் இருக்கிறது. நீங்கள் அந்த அலுவலகத்தில் யாரை சந்தித்து உங்கள் வேலையை சாதிப்பீர்கள்  ? 
அதே போல் தேவர்களுக்கு எல்லாம் தலைவராக, தெய்வங்களுக்கு எல்லாம் தலைவராக, பிறப்பும், இறப்பும், முதலும் முடிவும் இல்லாத பரம்பொருளாகிய பரமசிவனார் இருக்கிறார். இதை அத்தனை சித்தர்களும், ஞானிகளும் குருமார்களும் வேதியர்களும் அப்படியே பதிவு செய்துள்ளார்கள். அந்த பரம்பொருள் புரியும் தொழில்கள் 5 - படைத்தல், காத்தல், ஒடுக்குதல் (அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த 5 தொழில்களையும் பல்வேறு கருவிகளைக் கொண்டு செய்கிறார். படைப்பதற்கு பிரம்மா, காப்பதற்கு விஷ்ணு. ஒடுக்குவதற்கு உருத்திரன். மறைத்தல், அருளல் தானே முன்னின்று செய்யும் அளவில்லாத ஆனந்தப் பொருள் பரமசிவனார். பேரண்டத்திலிருக்கும் அனைத்து தத்துவத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் சிவபெருமான். அவர் ஒருவரே பரமுக்தி அளிக்க வல்லமை பெற்றவர்.
உங்கள் முக்கிய வேலையை எப்படி நீங்கள் அலுவலகத்தின் தலைவரை சந்தித்து எளிதாக முடித்துக் கொள்வீர்கள் ?  அதற்காக, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மற்ற மேலாளரிடமோ, கடைநிலை ஊழியரிடமோ சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவர்களை நிந்திக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் தங்களுக்கு தங்கள் தலைவர் இட்ட வேலையை செவ்வனே செய்கிறார்கள்.
அதே போல், இந்த பேரண்டத்தின் தலைவரையே எப்போதும் நினைத்து துதியுங்கள். அவரைக் கொண்டு உங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள்.யாரையும் எப்போதும், எதற்காகவும் ஒருபோதும் நிந்தனை செய்யாதீர்கள்.

பச்சைத்தால் அரவாட்டீ
    படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே
    அடியேனை உய்யக்கொண்
டெச்சத்தார் சிறுதெய்வம்
    ஏத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா
    றன்றே உன் திறம்நினைந்தே
-- திருஏசறவு, திருவாசகம், மாணிக்கவாசகர்.
சிவபெருமானைத் தவிர வேறு எந்த சிறுதெய்வத்தை ஏத்தி முக்தி பெற்றாலும், மீண்டும் பிறந்து இறக்கும் நிலை உண்டு.

பதப்பொருள் : பச்சைத் தால் அரவு ஆட்டீ - பசுமையான நாக்கினையுடைய பாம்பை அசைப்பவனே, படர் சடையாய் - விரிந்த சடையை உடையவனே, பாதமலர் உச்சத்தார் பெருமானே - திருவடியைத் தம்முடைய உச்சியிலே கொண்டிருப்பவரது பெருமானே, அடியேனை - அடியேனாகிய என்னை, உய்யக்கொண்டு அன்றே - உய்யக்கொண்டதனாலன்றோ, அச்சோ - ஐயோ, எச்சத்து ஆர் சிறு தெய்வம் - குறைபாடுகள் நிறைந்த சிறிய தெய்வங்களை, ஏத்தாதே - வழிபடாமல், உன் திறம் நினைந்து - உன்னுடைய அருள் திறத்தினையே உண்ணி, என் சித்தத்து ஆறு உய்ந்தவாறு - என் எண்ணத்தின்படியே யான் கடைத்தேறிய நிலை உண்டாயிற்று?

நெறியல்லா நெறிதன்னை
    நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே
    திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத
    கூத்தன்தன் கூத்தையெனக்
கறியும் வண்ணம் அருளியவா
    றார்பெறுவார் அச்சோவே 
  -- அச்சோபதிகம், திருவாசகம் மாணிக்கவாசகர்.
நெறி = வழி. சிவபெருமானைத் துதிக்கின்ற நெறியல்லாத சிறுநெறிகள் என்னிடம் சேராமல் இருக்க தில்லைக்கூத்தன் எனக்கு அருள்புரிந்தார் என் மாணிக்கவாசகர் கூறுகிறார்.
இதே கருத்தை திருமூலர் பெருமான் கூறுகிறார். இதையே தெளிவாக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் ஆயிரம் சித்தர்கள், குருமார்கள், ஞானிகளின் கூற்றை இங்கே எடுத்துரைக்க முடியும். சைவ சமய பெரியோர்கள் அனைவரும் இதே கருத்தை தெளிவாக்குவர்.
பேரண்டத்தின் காலவெளியில் அற்ப வாழ்வே வாழும் நாம், நமக்கு கிடைக்கும் அற்ப நேரத்தில் அந்த சிவபெருமானையே போற்றித் துதிப்போம். நவகிரகங்கள் தங்களின் குறைகளை களைந்தெறிய சிவபெருமானிடம் வேண்டி நின்று சிவபெருமானிடம் அருள் பெற்ற தலங்களே நவகிரக தலங்கள். அந்த தலங்களில் நவகிரகங்களுக்கு அருள் புரிந்த சிவபெருமானையே நாம் துதித்து வணங்க வேண்டும். (எதற்காகவும், யாரையும் எப்போதும் நிந்தனை செய்யாதீர்.)
பன்னிரு திருமுறைகளும், சைவ சமய குருமார்களான 63 நாயன்மார்களின் நெறியையே சைவ உலகம் ஏற்றுக் கொண்டு நாமும் பின்பற்ற வேண்டிய வழியாகும்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம்பலம்.

---------------------------

திருச்சிற்றம்பலம்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன் - மணிவாசகர்.

நம் குறிக்கோள் எதுவோ, அதில் மட்டுமே நம் கவனம் முழுவதும் இருக்க வேண்டும். நம் முயற்சி முழுவதும் அந்த குறிக்கோளை நோக்கியே பயணம் செய்ய வேண்டும். கவனத்தை வேறெங்கும் சிதற விடாமல், நம் மனம், மெய், மொழி, சித்தம் என அனைத்தும் அந்த குறிக்கோளில் குவிந்தால், நம் இலக்கை எளிதாக அடையலாம். இவ்வுலகை நன்றாக புரிந்து கொண்ட எவர்க்கும் இறைவன் திருவடி அருளைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக இருக்கும். ஏனெனில், வேறு எவையும் நிலையில்லாதவை. தாற்காலிகமானவை. அவற்றை விலக்கி இறைவனின் திருவடி பேற்றைப் பெருவதே குறிக்கோளாகும்.

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
   வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
   வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
   திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
   புறம்போகலொட் டேனே. 

  -- உயிருண்ணிப்பத்து, திருவாசகம்.
பொழிப்புரை :

நான் பிறந்தும் இறந்தும் உழல்வதை விரும்ப வில்லை. ஆகையால் புகழை விரும்பேன். பொருளை விரும்பேன். மண்ணுலக வாழ்க்கையும் விண்ணுலக வாழ்க்கையும் விரும்பேன். சிவத்தை விரும்பாத புறத்தாரை, ஒரு நாளும் தொடமாட்டேன். நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறைவனது திருவடியைச் சென்று அடைந் தேன். அதனையே அணிந்து கொண்டேன். இனிமேல் அதனைவிட்டு நீங்கேன். என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.


நமசிவாய.
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

----------------


திருச்சிற்றம்பலம்.

அடிமுடி தேடிய புராணம் - அருணாச்சல புராணம்.


திருமாலுக்கும் பிரம்மாவிற்கும் தங்களில் யார் பெரியவன் என்கிற வாதம். இந்த வாதத்தினால் அவர்கள் படைக்கும், காக்கும் தொழில்கள் தடைபட, இந்த வாதத்தை முடிவுக்கு கொண்டு வர, முழுமுதற் கடவுளாகிய பரமசிவனார் கருணை கொண்டு, அவர்கள் முன்னர் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஓர் அக்னிப்பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தாங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே திருமால் ஒரு பன்றி உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத திருமால் சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக திருமாலை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.

இந்த அக்னிப்பிழம்பாகத் தோன்றிய பரமசிவனார் தான் அண்ணாமலையார் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் இலிங்கோத்பவர். இந்த இலிங்கோத்பவர் வடிவம் பரமசிவனாரின் அடியும் முடியும் தெரியாத வண்ணம் செதுக்கப்பட்டிருக்கும். Our Universe is LIMITLESS and EXPANDING Universe என்ற உண்மை நம் வரலாறுகளில் பரமசிவனார் அருளால் புராண காலங்களிலேயே உணர்த்தப்பட்டு பதிவாகிவிட்டது. அதற்கு சான்று தான் இந்த அண்ணாமலையார்.  இன்றும் பல சிவாலயங்களின் பின்புறத்தில் அண்ணாமலையாராகிய இலிங்கோத்பவர் வீற்றிருப்பார். இதை முன்னர் அறிந்திராவிடில், அடுத்த முறை செல்லும் போது உற்று நோக்குங்கள்.
இந்த வரலாற்றை திருமூலர் பெருமானும் எடுத்துரைக்கிறார்.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே .
திருமந்திரம் - முதல் தந்திரம், 9.

பொழிப்புரை:

`சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.
அரன் நாமமே சூழ்க. வாயகமும் துயர் தீர்கவே.
திருமுறை அறிவோம். திருவருள் பெறுவோம்.
-------------------------------

திருச்சிற்றம்பலம்.
பரவெளி (பேரண்டம்) எங்கும் பரவி நிற்கும் பரம்பொருள், அனைத்தையும் கட்டுப்படுத்த வல்லதாக மறைந்து நிற்கிறது. அதே பரம்பொருள், நம் உடலைப் பற்றி நிற்கும் உயிர் உணர்வில் மந்திரமாகவும் நிற்கிறது. அந்த பரம்பொருளை நாம் உணர முடியும். அந்த பரம்பொருளைப் பற்றி உணர உணர, நமக்கு பேரின்பம் பெருகும். அவ்வாறு நான் பெற்ற அந்த எல்லையில்லா பேரின்பத்தை இவ்வுலகமும் பெறுவதாக.

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
திருமந்திரம். முதல் தந்திரம், 24.
ஆகவே, பரம்பொருளைப் பற்றுக. பற்றப் பற்ற, பேரின்பம் பெருகும். மந்திர தரிசனமும் கிடைக்கும். இது உண்மை.
நமசிவாய.
---------------------------------

திருச்சிற்றம்பலம்.

பஞ்சகவ்வியம் என்பது யாது?

பஞ்சகவ்வியம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர் ஆகிய ஐந்துமாம். பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகிய இரண்டையும் நீக்கிச் சிலர் வெண்ணெய் திரட்டுப் பால் என்பது ஆகமங்கட்கும் உலக வழக்குக்கும் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள திருக்கோயில் வழக்குக்கும் முரணாகும். உதாரணமாக தெஇக.8-66 என்ற திருவண்ணாமலைக் கல்வெட்டில் "திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்சகவ்வியம் ஆடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்னாமலை என்னும் நாழியால் கோமூத்ரம் உழக்கும் கோமயம் ஆழாக்கும் பால் நாழி உழக்கும் தயிர் நாழி உரியும் நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும்..." என்றிருத்தல் காண்க. இதில் கோமூத்ரம் கோமயம் அளவுகளையும் நோக்குக.
(கருப்பக் கிரகத்தில் சூரிய வெப்பமும் காற்றோட்டமும் இல்லாத நிலையில் கிருமிகள் விளைநிலமாதலைத் தடுத்தற்குக் கிருமிக் கொல்லிகளாகிய (Germicides) கோமூத்ரமும் கோமயமும் நிறைய உபயோகிக்கப் படுதல் அவசியம்.)
  1. வீடுபேறாகிய முத்தியைப் பெறுவதற்கு நேர்வழி யாது?
    (1) ஞானத்தை உயிர்க்கு ஏற்படுத்தும் பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் முதலில் தான் கற்க வேண்டும்; (2) பின்பு பிறர்க்கு கற்பிக்க வேண்டும்; (3) அவற்றில் உள்ள சிறந்த பொருள் நுட்பங்களை நல்லாசிரியரிடம்தான் கேட்க வேண்டும்; (4) பின்பு பிறர்க்கு எளிமையாக எடுத்துரைக்க வேண்டும்; (5) அத்தகு அரிய பெரிய பொருள்களைப்பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இந்த ஐந்து வழிகளும் இறைவன் திருவடியாகிய முத்திப்பேற்றினை அடைவதற்கு உரிய மேலான நேர்வழிகளாகும்.
    இதற்குப் பிரமாணம் வருமாறு :-
    “ஞானநூல் தனைஓதல்; ஓதுவித்தல்;
     நற்பொருளைக் கேட்பித்தல்; தான் கேட்டல், நன்றாய்
     ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
     இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை" - சித்தியார் (275)
    
  2. இத்தகு ஞானம் உயிர்க்கு எப்போது கிட்டும்?
    முதலில், ஞானத்தைப் பெறவேண்டும் என்னும் வேட்கையைப் பெருக்கும் (வேணவா) உயிர்க்கு ஏற்பட வேண்டும். அந்த வேட்கை பெருகப் பெருக, உயிர்கள் பல சிவப்பணிகளில் ஈடுபடும். அத்தகைய ஈடுபாடு, உயிர்க்கு மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை நிகழ்த்தும். அப்போது உயிர்க்கு ஞானம் கிட்டும்.
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே.
திருச்சிற்றம்பலம்.

----------------------------

திருச்சிற்றம்பலம்.

திருக்கோவில் வழிபாட்டு முறை.

  1. திருக்கோயிலுக்கு எவ்வாறு போதல் வேண்டும்?
    குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் விளக்கு, புஷ்பம் போன்ற வழிபாட்டுப் பொருள்களை ஏந்திச் செல்லல் வேண்டும். வழிபட்டுப் பொருட்களை இடுப்புக்கு மேல் தூய்மையாக ஏந்திச் செல்லவேண்டும்.
  2. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
    தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
  3. திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
    பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
  4. கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  5. தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  6. எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
    கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
  7. ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
    எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  8. எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  9. பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
    ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  10. ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  11. எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
  12. விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
    திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
  13. எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்
  14. எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.

----------------------

திருச்சிற்றம்பலம்.

திருக்கோவில் வழிபாட்டு முறை - பாகம் 2.


  1. திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
    முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷிணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.
  2. விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
    முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
  3. திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
  4. எந்தக் காலத்தில் தரிசனம் செய்தல் கூடாது?
    திரையிட்டிருக்கும் நேரம், அமுது செய்வித்தல் காலங்களில் தரிசனம் செய்தல் கூடாது.
  5. திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
    உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
  6. வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
    சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும்.
  7. ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?
    சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.
  8. சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?
    கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
 

திருக்கோவில் வழிபாட்டு முறை - பாகம் 3.

  1. திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
    ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
  2. சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
    விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன் நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.
  3. பரிவார தேவர்கள் யார்?
    இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
  4. எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.
திருச்சிற்றம்பலம்.

---------------------

திருச்சிற்றம்பலம்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
கொடிய விடம் உடையது பாம்பு. அந்த விடம் நம் உடலில் தீண்டப்பெற்றால் உடன் இறப்பது திண்ணம். அத்தகைய கொடிய பாம்பிற்கும் கூட நான் அஞ்ச மாட்டேன். உண்மையைப் போல் சொல்கின்ற பொய்யர்களைப் பார்த்தும் கூட நான் அஞ்ச மாட்டேன். ஆனால் யாரைப் பார்த்தால் எனக்கு அளவில்லாத அச்சம் வருகிறது தெரியுமா ?
கற்றையான நீண்ட சடையை உடைய, யாவர்க்கும் பெரியோனாகிய, நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானின் திருவடி அருகே சென்று, அதைப் பார்த்த பின்பும், இன்னும் வேறொரு தெய்வம் இருப்பதாக எண்ணிக் கொண்டு, சிவபெருமானைப் போற்றாதவரைக் கண்டால், ஐயோ, என் அச்சத்திற்கு அளவே இல்லை.

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
    கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
    உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
  -- அச்சப்பத்து, திருவாசகம், மாணிக்கவாசகர்.

பொழிப்புரை: புற்றிலேயுள்ள கொடிய பாம்பிற்கும் அஞ்ச மாட்டேன். பொய்யர்களது மெய் போன்ற சொற்களுக்கும் அஞ்ச மாட்டேன். திரட்சியான நீண்ட சடையையுடைய, எம் பெரியோனாகிய, நெற்றிக் கண்ணையுடைய இறைவனது திருவடியை அடைந்தும், வேறொரு தெய்வத்தை இருப்பதாக எண்ணி, எம் பெருமானைப் போற்றாதாரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
நமசிவாய.
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

---------------------

திருச்சிற்றம்பலம்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

யாரைப் பார்த்து நான் அஞ்சுவேன் ?


ஆசை மிகுந்து வந்தாலும் அஞ்சமாட்டேன். வினை யாகிற கடல் என்னைச் சூழ்ந்து கொண்டாலும் அஞ்சமாட்டேன். பிரம விட்டுணுகளாகிய இருவராலும் மாறுபட்டுக் காண முடியாத, எம் தலைவனாகிய, இறைவனது திருவடிவத்தையே கண்டு களிப்பதன்றி, மற்றைய தேவர்களை என்ன தேவரென்று, அருவருப்புக் கொள்ளாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

வெருவரேன் வேட்கை வந்தால்
    வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
    எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
    தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே

வலிமையான மாமிசம் பொருந்திய வேற்படைக் கும் அஞ்சமாட்டேன். வளையலை அணிந்த பெண்களுடைய கடைக் கண் பார்வைக்கும் அஞ்சமாட்டேன். எலும்புகளெல்லாம் உருகும் படியாகப் பார்த்துப் பொன்னம்பலத்தில் நடிக்கின்ற, எனது துளை யிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

வன்புலால் வேலும் அஞ்சேன்
    வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
    அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
    இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே

மொழியால் கிளி போன்ற மாதரது இனிய சொற்களுக்கு அஞ்சமாட்டேன். அவரது வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன். வெண்மையான திருநீற்றில் மூழ்கிய திருமேனியையுடைய அந்தணனது திருவடியை அடைந்து நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய் வணங்கி அழுது, உள்ளம் நெகிழ்ந்து இவ்விடத்தில் கனிதல் இல்லாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

கிளியனார் கிளவி அஞ்சேன்
    அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
    வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
    தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே 
நமசிவாய.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

-----------------

திருச்சிற்றம்பலம்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

எல்லா வகையான நோய்களும் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சமாட்டேன். துண்டப் பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது, தொண்டரோடு பொருந்தி, அத்திருமால், வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காண மாட்டாத சிவந்த திருவடியைத் துதித்து திருவெண்ணீறு அணியாத வரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
    தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
    சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே 

ஒளிவீசுகின்ற நெருப்புக்கும் அஞ்சமாட்டேன். மலை, தலைகீழாகப் பிறழ்ந்திட்டாலும் அஞ்சமாட்டேன். தோள்களில் விளங்குகின்ற திருவெண்ணீற்றையுடையவனும், காளையை ஊர்தி யாக உடையவனும்,சொல் அளவையைக் கடந்த அப்பனுமாகிய இறைவனது திருவடித் தாமரைகளைத் துதித்து, பெருமை பொருந்திய மலர்களைச் சார்த்தி மனம் உருகுகின்ற அடிமைகள் அல்லாதவர் களைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அள வன்று.

வாளுலாம் எரியும் அஞ்சேன்
    வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
    சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
    தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே

தவிர்க்க முடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன். இறத்தல் முதலானவற்றிற்கும் அஞ்சமாட்டேன். புகையைக் கொண்ட நெருப்பைக் கையிலே ஏந்தி வீசிக் கொண்டு, விளங்குகின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அரும்பு மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்த முதல்வனது திருவடியைத் துதித்து, மனம் நெகிழாதவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
    சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
    பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
    முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே
  -- அச்சப்பத்து, திருவாசகம், மாணிக்கவாசகர்.
நமசிவாய.
அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.

--------------------

திருச்சிற்றம்பலம்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன். மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
    விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
    சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே 

மேகத்தில் உலாவுகின்ற இடிக்கும் அஞ்ச மாட்டேன். அரசரது நட்புக்கும் அஞ்சமாட்டேன். விடத்தையே அமுத மாக ஏற்றுக் கொண்ட இறைவனானவன், எம் தலைவனாகிச் செம்மை யாகவே எம்மை ஆட்கொண்டான். அவனது செல்வமாகிய திரு வெண்ணீற்றைத் தமது நெற்றியில் பூச மாட்டாமல் அஞ்சுவோராகிய அவரைக் காணின், ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
  மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
   நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
   திருமுண்டம் தீட்ட மாட்டா
 தஞ்சுவா ரவரைக் கண்டால்
   அம்மநாம் அஞ்சு மாறே.கொலைத் தன்மை தங்கிய அம்புக்கு அஞ்ச மாட்டேன். இயமனது கோபத்துக்கும் அஞ்சமாட்டேன். நீண்ட பிறையாகிய, அணிகலத்தையுடைய சிவபெருமானை எண்ணிக் கசிந்து உருகி, நெகிழ்ந்து ஒளிபொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகத் துதித்து நின்று புகழ மாட்டாத ஆண்மை யுடையரல்லாரைக் காணின் ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.கோணிலா வாளி அஞ்சேன்
  கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
   நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
   வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
   அம்மநாம் அஞ்சு மாறே. 
தலைவனின் தாளை வணங்குவோம்.
நமசிவாய.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

--------------------

திருச்சிற்றம்பலம்.