முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தோடுடைய செவியன் விடையேறி - திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிக பாடல்



சிவமயம்


பதிக வரலாறு

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திரு வாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்`1 என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப் படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத் தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மை யப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத் தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக் கொடியைப் பார்த்து, `துணை முலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவ ஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப் பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு ``நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அரு மறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

 
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரைமலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில்வேண்டி முன்நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமைமிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவனல்லனோ
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப்
பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூற்றாயினவாறு விலக்ககிலீர் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய பதிக பாடல்



சிவமயம்
பதிக வரலாறு

நான்காம் திருமுறை திருவதிகை வீரட்டானம். பதிக வரலாறு: நீரார் கெடில வட நீள் கரையின் நீடுபெருஞ் சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து நாதன்தாள் நண்ணுவாராய்த் தூய சிவ நன்னெறியே சென்று, பேராத பாசப் பிணிப்பு ஒழிய ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அச் செம்பவளக் குன்றை - சுடரொளியைத் தொழுது, "என்னை ஆண்டருளினீர் ஆகில், அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்தாள வேண்டும்" எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தார். பவ வினை தீர்ப்பவர் அதைத் திரு வுள்ளம் பற்றினார்; தபோதனியாரது கனவின் கண் போந்தார்; "நீ உன் மனக்கவலையை ஒழி. என்னை அடைய முன்னமே முனி யாகித் தவமுயன்றுள்ளான் உன் உடன் பிறந்தான்; அன்ன வனைச் சூலைமடுத்து ஆள்வன்" என அருளினார். அவ்வாறே மருணீக்கியாரைச் சூலைநோய் வடிவாய் நின்று தடுத்துக் கொணர்ந்த திருவருள், செய்தவமாதரது திருமடத்திற்ச் சேர்த்தது. அக்கையார் அடியில் விழுந்து இறைஞ்சினார் தம்பியார். "பெருமானருளை நினைந்து எழுந்திரீர்" என மொழிந்தார் திலகவதியார். மருணீக்கியார் எழுந்து தொழுதார். "இஃது அதிகைப் பிரான் அருளே. அப்பற்றறுத்த பரமனடி பணிந்து பணி செய்வீர்" எனப் பணித்தார். அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சினார் மருணீக்கியார். திலகவதியார் சிவ பெருமான் திருவருளை நினைந்து திருநீற்றைத் திருவைந்தெழுத் தோதிக் கொடுத்துத் திருவீரட்டம் சென்று உள்ளே புகக் குறித் தார். அத் திருவாளன் திருநீற்றினை அப் பெருந்தகையார் பெரு வாழ்வு வந்தது எனப் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து வந்தார். உற்ற விடத்து உய்யும்நெறி தர முன்பு தோன்றிய திலக வதியார் முன்னே செல்லப் பின்னே சென்றார் பிற்றோன்றலார். திருப்பள்ளியெழுச்சி வேளை. திருநீறணிந்த அவர் அகத்திருளும் மாறிற்று. உலகில் இரவில் நிறைந்த புறத்திருளும் போயிற்று. ஆண்டிற் சிறுமையும் அடிமையிற் பெருமையுமுடைய அம்மையார் திருத்தொண்டிற்குரியவற்றொடு தம்பியாரைக் கொண்டு திருவதிகை மாநகருள் புகுந்தார். இருவரும் தொழுதனர்; வலங்கொண்டிறைஞ்சினர்; நிலமிசை விழுந்து வணங்கினர். தம்பிரான் திருவருளால் மருணீக்கியார் உரைத்தமிழ் மாலைகள் சார்த்தும் உணர்வு பெற்றார்; அதனை உணர்ந்தார்; உரைத்தார்; அவற்றுள் முதலாவது "கூற்றாயினவாறு விலக்ககி லீர்" என நீடிய (தி.12 திருநாவு. 70.) இக்கோதில் திருப்பதிகம்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகை... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகை... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா - சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிக பாடல்



சிவமயம்
பதிக வரலாறு

ஏழாம் திருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்துவந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப் படுதற்கேதுவாக, பூக்கொய்யவந்த சேடியர் இருவர்பால் சிறிது மனத்தைச் செலுத்த, பெருமான் கட்டளைப்படி திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடை யனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத்தோன்றி நம்பி யாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்ந்தார். மணப்பருவம் அடைந்த அவருக்குப் புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளை மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். மணப்பந்தரில் சிவ பெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி கிழ வேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு அடிமை என்று திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு ஆட்கொண்டு `நம்மைச் சொற்றமிழ் பாடுக` என்று கட்டளையிட்டருளினார். அதுபோழ்து வன்றொண்டர் முன்பு இறைவனைப் `பித்தன்` என்று பேசிய சொல்லையே முதலாகக்கொண்டு பாடும்படி அருளிய இறைவன் அருளாணையின் வண்ணம், பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 தடுத்தாட்கொண்ட புராணம். 70 - 74) குறிப்பு :இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, `அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது தகுமோ` என இரங்கி அருளிச்செய்தது.

           பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா 
           எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை      
           வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்   
           அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

நாயேன்பல நாளும்நினைப்   பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற   லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
ஆயாஉனக் காளாய்இனி   அல்லேன்என லாமே.

மூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மன்னேமற வாதேநினைக்   கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி   ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
அன்னேஉனக் காளாய்இனி   அல்லேன்என லாமே.

தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

முடியேன்இனிப் பிறவேன்பெறின்
  மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப்   பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி   அல்லேன்என லாமே.

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.

பாதம்பணி வார்கள்பெறு    பண்டம்மது பணியா
யாதன்பொரு ளானேன்அறி   வில்லேன்அரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
ஆதீஉனக் காளாய்இனி    அல்லேன்என லாமே.

அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், `ஆதன்` என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.

தண்ணார்மதி சூடீதழல்   போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி  யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி   அல்லேன்என லாமே.

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஊனாய்உயி ரானாய்உட   லானாய்உல கானாய்
வானாய்நில னானாய்கட  லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    நல்லூரருட் டுறையுள்
ஆனாய்உனக் காளாய்இனி    அல்லேன்என லாமே.

பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

ஏற்றார்புரம் மூன்றும்மெரி   யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி   வேனோசெக்கர் வான்நீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    நல்லூரருட் டுறையுள்
ஆற்றாய்உனக் காளாய்இனி   அல்லேன்என லாமே.

பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ! அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மழுவாள்வலன் ஏந்தீமறை   யோதீமங்கை பங்கா
தொழுவாரவர் துயராயின   தீர்த்தல்லுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்   நல்லூரருட் டுறையுள்
அழகாஉனக் காளாய்இனி  அல்லேன்என லாமே.

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகேன, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

காரூர்புன லெய்திக்கரை  கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்    பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்    நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்    அல்லேன்என லாமே.

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

சிவசிவ திருச்சிற்றம்பலம். சிவசிவ