முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

கூற்றாயினவாறு விலக்ககிலீர் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய பதிக பாடல்



சிவமயம்
பதிக வரலாறு

நான்காம் திருமுறை திருவதிகை வீரட்டானம். பதிக வரலாறு: நீரார் கெடில வட நீள் கரையின் நீடுபெருஞ் சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து நாதன்தாள் நண்ணுவாராய்த் தூய சிவ நன்னெறியே சென்று, பேராத பாசப் பிணிப்பு ஒழிய ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அச் செம்பவளக் குன்றை - சுடரொளியைத் தொழுது, "என்னை ஆண்டருளினீர் ஆகில், அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்தாள வேண்டும்" எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தார். பவ வினை தீர்ப்பவர் அதைத் திரு வுள்ளம் பற்றினார்; தபோதனியாரது கனவின் கண் போந்தார்; "நீ உன் மனக்கவலையை ஒழி. என்னை அடைய முன்னமே முனி யாகித் தவமுயன்றுள்ளான் உன் உடன் பிறந்தான்; அன்ன வனைச் சூலைமடுத்து ஆள்வன்" என அருளினார். அவ்வாறே மருணீக்கியாரைச் சூலைநோய் வடிவாய் நின்று தடுத்துக் கொணர்ந்த திருவருள், செய்தவமாதரது திருமடத்திற்ச் சேர்த்தது. அக்கையார் அடியில் விழுந்து இறைஞ்சினார் தம்பியார். "பெருமானருளை நினைந்து எழுந்திரீர்" என மொழிந்தார் திலகவதியார். மருணீக்கியார் எழுந்து தொழுதார். "இஃது அதிகைப் பிரான் அருளே. அப்பற்றறுத்த பரமனடி பணிந்து பணி செய்வீர்" எனப் பணித்தார். அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சினார் மருணீக்கியார். திலகவதியார் சிவ பெருமான் திருவருளை நினைந்து திருநீற்றைத் திருவைந்தெழுத் தோதிக் கொடுத்துத் திருவீரட்டம் சென்று உள்ளே புகக் குறித் தார். அத் திருவாளன் திருநீற்றினை அப் பெருந்தகையார் பெரு வாழ்வு வந்தது எனப் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து வந்தார். உற்ற விடத்து உய்யும்நெறி தர முன்பு தோன்றிய திலக வதியார் முன்னே செல்லப் பின்னே சென்றார் பிற்றோன்றலார். திருப்பள்ளியெழுச்சி வேளை. திருநீறணிந்த அவர் அகத்திருளும் மாறிற்று. உலகில் இரவில் நிறைந்த புறத்திருளும் போயிற்று. ஆண்டிற் சிறுமையும் அடிமையிற் பெருமையுமுடைய அம்மையார் திருத்தொண்டிற்குரியவற்றொடு தம்பியாரைக் கொண்டு திருவதிகை மாநகருள் புகுந்தார். இருவரும் தொழுதனர்; வலங்கொண்டிறைஞ்சினர்; நிலமிசை விழுந்து வணங்கினர். தம்பிரான் திருவருளால் மருணீக்கியார் உரைத்தமிழ் மாலைகள் சார்த்தும் உணர்வு பெற்றார்; அதனை உணர்ந்தார்; உரைத்தார்; அவற்றுள் முதலாவது "கூற்றாயினவாறு விலக்ககி லீர்" என நீடிய (தி.12 திருநாவு. 70.) இக்கோதில் திருப்பதிகம்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகை... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
அதிகை... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
அதிகை... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 
ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

3 கருத்துகள்: