திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் சிந்தனைகள் தொடர்ச்சி - பகுதி 7
*முதல் நூற்பா*
முதற்
கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள்.
காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார்
ஆசிரியர்.
நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும்
முதற் கடவுள் உண்டு என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற்
கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர்
எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும்.
இனி, நூற்பாவை நோக்குவோம்.
நூற்பா
*அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்*
*தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்*
*அந்தம் ஆதி என்மனார் புலவர்.*
இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.
*ஆசிரியர் கூறும் கருத்துரை*
என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நூதலிற்று.
*கருத்துரையின் பொருள்*
பிரமன்,
மால், உருத்திரன் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என்பர். அவர்கள்
சிவபெருமானது ஆணை வழி நின்று, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய
தொழில்களை ஓர் எல்லையளவில் செய்வர்.
அவர்களுள் உருத்திரன் தான்
செய்த புண்ணிய மிகுதியால் சிவனுக்குரிய உருவத்தையும், தொழிலையும்,
உருத்திரன் என்னும் பெயரையும் பெற்று, அவனது சங்காரத் தொழிலை ஒரு
பகுதியளவில் மட்டும் செய்வான். அவன் செய்வது ஏகதேச சங்காரம் எனப்படும்.
(ஏகதேசம்- பகுதி)
அம்மூவரும் ஒவ்வொரு தொழிலுக்கே உரியவராக,
சிவபெருமான் ஒருவனே முத்தொழிலுக்கும் முதல்வனாய் நின்று இறுதிக் காலத்தில்
எல்லாவற்றையும் எஞ்சாமல் ஒடுக்குகின்ற முற்றழிப்பைச் செய்வான். முற்றழிப்பு
மகாசங்காரம் எனப்படும். அதனைச் செய்பவன் மகா சங்கார காரணன்
எனப்படுகின்றான்.
மகாசங்காரம் ஆகிய முற்றழிப்பைச் செய்யும் முதல்வனையே முதற் கடவுளாக உடையது இவ்வுலகம் என்பது மேலே உள்ள கருத்துரையின் பொருளாகும்.
*நூற்பாவின் பொருள்*:
இவ்வுலகம்
ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம்.
எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம்
அறிவினால்
சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது.
இவ்வாறு பகதிகளை
உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல்,
நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.
அறிவற்றதாகிய
உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து
நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.
இவ்வுலகம்
தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு
ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.
எனவே
ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான்
என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் வல்லோர் கூறுவர்.
*பதவுரை:*
*அவன்
அவள் அது எனும் அவை* - அவன், அவள் என்று சுட்டிக் குறிப்பிடும் உயர்திணைப்
பொருள்களையும், அது என்று சுட்டிக் குறிப்பிடும் அஃறிணைப் பொருள்களையும்
தனது பகுதிகளாக உடைய இவ்வுலகமாகிய தொகுதி
*மூவினைமையின்* - தோன்றி, நின்று, அழியும் தன்மை உடையதாய் இருத்தலின்
*தோற்றிய திதியே* - அஃது உள்பொருளேயாகும்; மேலும் ஒருவன் தோற்றுவித்ததாகும்.
*ஒடுங்கி
உளதாம்* - இவ் வுலகம், தான் தோன்றுவதற்கு முன்பு அவனிடத்தில் ஒடுங்கி
நின்றது. ஒடுங்குதற்கு இடமாய் நின்ற அவனிடத்தினின்றும் அது மீளத்
தோன்றுவதாகும்.
*மலத்தால்* - தன்னிடம் ஒடுங்கி நின்ற இவ்வுலகத்தை
அவன் தோற்றுவிப்பது எதன் பொருட்டு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ
மலமாகிய மாசினை நீக்குதற் பொருட்டேயாகும்.
*அந்தம் ஆதி* -
முற்றழிப்புக் காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் தன்னிடம் ஒடுக்கி முடிவை
உண்டாக்குகின்ற அழித்தற் கடவுளே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர்.
*என்மனார் புலவர்* - இவ்வாறு கூறுவர் அளவை நூல் உணர்ந்த அறிஞர்.
*சிறப்புரை:*
அவை
என்பதற்குத் தொகுதி என்பது பொருள். மக்கள் பலர் திரண்டு கூடியுள்ள இடத்தை
அவை என்றும், அவைக்களம் என்றும் குறிப்பிடும் வழக்கினை இங்கு நினைவு
கூரலாம்.
தோற்றிய என்பதற்குத் தோற்றுவித்த என்பது பொருளாகும்.
தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல், தோற்றிய எனப் பிற வினையாகக்
கூறியதனால், இவ்வுலகம் தானே தோன்றாது என்பதும், தன்னைச் செயற்படுத்தும்
முதல்வன் ஒருவனை உடையது என்பதும் உணர்த்தப்பட்டது.
திதி என்னும் வடசொல்லுக்கு நேரான பொருள் நிலை என்பது. இவ்விடத்தில் அச்சொல் அப்பொருளைத் தராமல், உள்ளது என்னும் பொருளைத் தந்தது.
ஒடுங்கி என்பது பெயர். ஒடுங்குதற்கு இடமாய் உள்ளவன் என்று அது பொருள்படும்.
ஒடுங்கி உளதாம் என்ற தொடரை ஒடுங்கியினின்று உளதாம் என அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.
மலத்து என்பதனை மலத்தால் என வைத்துக் கொள்ள வேண்டும்.
நோயால்
மருத்துவரை அணுகினான் என்றால், நோய் நீங்குதல் காரணமாக மருத்துவரை
அணுகினான் என்று பொருள் கொள்கிறோம். வறுமையால் வள்ளலை நாடினான் என்றால்,
வறுமை நீங்குதல் காரணமாக வள்ளலை நாடினான் எனப் பொருள் கொள்கிறோம். அவ்வாறே
இங்கும் மலத்தால் உளதாம் என்பதற்கு மலம் நீங்குதல் காரணாக உலகம் உளதாயிற்று
எனப் பொருள் கொள்ள வேண்டும்.
அந்தம் என்றால் முடிவு; ஆதி என்றால்
முதல் என நாம் அறிவோம். ஆனால் அச்சொற்கள் இங்குக் குறிக்கும் பொருள்
அவையல்ல. அந்தத்தைச் செய்பவனை அழித்தற் கடவுளை அந்தம் என்றார் ஆசிரியர்;
முதலாய் நிற்பவனை- முதற் கடவுளை ஆதி என்றார். எனவே அந்தம் ஆதி என்ற
தொடரால், முற்றழிப்பைச் செய்பவனே முதற் கடவுள் என்றாராயிற்று.
அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.
உலகின் தெருக்கள் எங்கும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருச்சிற்றம்பலம்.