சிவஞானபோதம் சிந்தனைகள் தொடர்.
வாட்சப்பில் பதிவுற்ற சிந்தனைகளின் தொகுப்பு.
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ?
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் நூலின் நோக்கம்
அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.
உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் நூல் அமைப்பு
இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது.நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன.
நூற்பாக்களின் பொருள் பின் வருவோர்க்கு ஐயம், திரிபுகளுக்கு இடமின்றி விளங்குதற்பொருட்டு ஆசிரியரே ஒவ்வொரு நூற்பாவுக்கும் கருத்துரையும், சுருக்கமான பொழிப்புரையும் செய்துள்ளார். அப்பொழிப்புரை வார்த்திகம் எனப்படும். வார்த்திகப் பொழிப்புரை பின்வருமாறு அமைந்துள்ளது.
ஒவ்வொரு நூற்பாவையும் ஆசிரியர் அதன் பொருள் நிலையை வைத்துப் பல கூறுகளாக வகுத்துக் கொள்கிறார். அவ்வாறு வகுத்துக் கொள்ளும் கூறு அல்லது பகுதி, அதிகரணம் எனப்படும்.
ஒவ்வொரு கூறிலும் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்னும் மூன்று உறுப்புகள் இடம்பெறும்.
மேற்கோள் என்பது நூற்பாவிலிருந்து பெறப்படும் கருத்தமைவு. ஏது என்பது அம்மேற்கோளை நிறுவுவதற்கு ஆசிரியர் உரைப்பது. எடுத்துக்காட்டு என்பது அவ்வேதுவை வலியுறுத்துதற்கு வருவது. இம்மூன்றனுள் மேற்கோளும் ஏதுவும் உரைநடையாய் அமைந்தவை. எடுத்துக்காட்டு செய்யுளாய் அமைந்தது.
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் - சைவ சிந்தாந்த பொருள்நிலை.
சைவ சமயத்தின் தத்துவக் கொள்கை, சைவ சித்தாந்தம் என வழங்கும். சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருள். எனவே சைவ சமயம் இறை பற்றியும், உயிர் பற்றியும், உயிரைப் பிணித்துள்ள தளை பற்றியும் கண்டறிந்த, முற்ற முடிந்த மெய்ம்மைகளே சைவ சித்தாந்தம் ஆகும். இந்நூலைக் கற்கப் புகுமுன், சைவ சித்தாந்த அடிப்படையைத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. அவ்வடிப்படைப் பொருள் நிலையைப் பின்வருமாறு கூறலாம்.*உயிர்கள்*: அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.
*ஆணவம்:*
அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதைப் போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது. அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்- அழுக்கு.
உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.
*மாயை:*
இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குவதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலுத்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தையும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.
குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வதுபோல, உடம்பு முதலிய இக்காரியங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம்மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.
ஆணவ மலத்தோடு கூடியிருந்த உயிர்கள் இப்பொழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.
இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக் காணலாம். எனவே இவ்வுலகம் அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.
*கன்மம்:*
அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகல
நிலைக்கு வந்த உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன. அவையே கன்மம் எனப் பெயர் பெறுகின்றன.
இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிற்குப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.
உயிர்கள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகப்பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.
உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும் அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒரு பொருள் உடையன.
*ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்:* முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன. அக்கட்டிகனை நீக்குவதற்காக மாயை, கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.
அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம் கையாளும் வழி, அதனைக் காட்டிலும் இறுக்கமாக மற்றொரு கட்டினைப் போடுவது தான். அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா? அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை,
கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.
சிவஞான போதம் சிந்தனைகள் தொடரும்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் சிந்தனைகள் தொடர்ச்சி...இறைவன் இருக்கிறான் என்பதை எப்படி நிரூபிப்பது ?
இறைவனைக்
காட்டு என்று பிறர் சொல்வதும், இறைவன் இருக்கிறானா என்று நமக்கு நாமே
கேட்பது நமக்கு ஓர் நாள் இவ்வுலகில் ஏற்படும் அனுபவம். கூர்ந்து
நோக்குவோமாயின், இந்த உலகம் பல விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது புரியும்.
உதாரணமாக, தினமும் காலையில் சூரியன் எழும். நாம் தூக்கி எறியும் பொருள்
கீழே வரும். ஒரு சூட்டிற்கு மேல் தண்ணீர் கொதித்து காணாமல் போகும். இப்படி
எண்ணற்ற. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் சூட்டி அறிந்து கொள்கிறோம். அது போல்,
பிறப்பவர்கள் எல்லோரும் இறக்கிறார்கள். இது விதி. எல்லா உயிரினங்களும்
அப்படியே. இறப்பவை எல்லாம் ஓர் நாள் தோன்றியவையே. மேலும் ஒவ்வொரு
செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. காரணம் இல்லாமல் எதுவுமே
இயங்குவதில்லை. இதற்கு எதுவுமே விதி விலக்கில்லை. இந்த விதிகளை அப்படியே
எல்லாவற்றுக்கும் நாம் செலுத்திப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
சிவஞான போதம் சிந்தனைகள் தொடர்ச்சி - பகுதி 5.
சிவஞான போதம் சிந்தனைகள் தொடர்ச்சி - பகுதி 5.
சிவபெருமான் தான் முழுமுதற்கடவுள் என்பது எவ்வாறு நிரூபிக்கப்படும் ?
இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கை. உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்களின் கொள்கையும் அதுவே. இறைவன் இருக்கிறான் என்பதைப் பார்த்தோம். இந்த புவனங்களைப் படைத்து காத்து அழித்து அருள் செய்கிறான் என்பதையும் பார்த்தோம். எவன் ஒருவனால் இந்த பேரண்ட புவனங்களை அழிக்க முடியுமோ, அவனாலேயே அதை திரும்ப அமைக்கவும் முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தை யார் வேண்டுமாயினும் தொடங்கலாம். அதை யார் வேண்டுமாயினும் நடத்தலாம். ஆனால், இந்த நிறுவனத்தை எந்த காரணத்திற்க்காகவும் ஒருவன் எப்போது வேண்டுமானாலும் மூடி விடலாம், நிறுத்தலாம் என்கிற நிலையில் அவனே அந்த நிறுவனத்தின் தலையெழுத்தை எழுத வல்லவனாகிறான். அந்த நிறுவனத்தை நிறுத்த வல்லவனால், பல நிறுவனத்தை கட்டி எழுப்பவும் முடியும். அது போலவே, எவன் ஒருவனால் இந்த அண்ட புவனங்களையெல்லாம் ஒடுக்கித் தம்முள் கொள்ள முடியுமோ, அவனாலே, அதைத் திரும்பவும் உருவாக்க முடியும். அதன் தலையெழுத்தை நிர்ணயிக்க முடியும். ஆகவே, இந்த பேரண்ட புவனங்களையெல்லாம் சிவபெருமான் ஒருவனாலேயே ஒடுக்க முடியும். பேரூழிக்காலத்தில் (மகா சங்காரகம்) அத்தனை புவனங்களும் அவனிடம் ஒடுங்கி விடும். பிரம்மன், திருமால், இந்திரன் என்று அத்தனை பேரும் சிவபெருமானிடத்தில் ஒடுங்கிப் போவர். சிவபெருமான் ஒருவன் மட்டுமே நிலைத்திருப்பான். அவன் விருப்பத்தினாலேயே அடுத்த படைப்புத் தொழிலை ஏவுவான்.
ஒரு பிரம்மனின் ஆயுள் 100 கோடி ஆண்டுகள். 100
பிரம்மனின் ஆயுள் ஒரு திருமாலின் ஆயுள். 100 திருமாலின் ஆயுள் ஒரு
உருத்திரனின் ஆயுள் என்பார் வாரியார் சுவாமிகள். இப்படி இந்த அநாதியான
புவனங்களில் நூறு கோடி பிரம்மர்கள் தோன்றி மறைந்து விட்டனர். ஆறு கோடி
நாராயணர்கள் தோன்றி மறைந்து விட்டனர்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் சிவபெருமான் மட்டுமே.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
சிவபெருமான் ஏன் உலகத்தைப் படைத்து ஒடுக்க வேண்டும் ?
திருச்சிற்றம்பலம்.
சிவஞானபோதம் சிந்தனைகள் தொடர்ச்சி - பகுதி 7*முதல் நூற்பா*
முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார் ஆசிரியர்.நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும் முதற் கடவுள் உண்டு என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற் கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர் எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும்.
இனி, நூற்பாவை நோக்குவோம்.
நூற்பா
*அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்*
*தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்*
*அந்தம் ஆதி என்மனார் புலவர்.*
இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.
*ஆசிரியர் கூறும் கருத்துரை*
என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நூதலிற்று.
*கருத்துரையின் பொருள்*
பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என்பர். அவர்கள் சிவபெருமானது ஆணை வழி நின்று, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை ஓர் எல்லையளவில் செய்வர்.
அவர்களுள் உருத்திரன் தான் செய்த புண்ணிய மிகுதியால் சிவனுக்குரிய உருவத்தையும், தொழிலையும், உருத்திரன் என்னும் பெயரையும் பெற்று, அவனது சங்காரத் தொழிலை ஒரு பகுதியளவில் மட்டும் செய்வான். அவன் செய்வது ஏகதேச சங்காரம் எனப்படும். (ஏகதேசம்- பகுதி)
அம்மூவரும் ஒவ்வொரு தொழிலுக்கே உரியவராக, சிவபெருமான் ஒருவனே முத்தொழிலுக்கும் முதல்வனாய் நின்று இறுதிக் காலத்தில் எல்லாவற்றையும் எஞ்சாமல் ஒடுக்குகின்ற முற்றழிப்பைச் செய்வான். முற்றழிப்பு மகாசங்காரம் எனப்படும். அதனைச் செய்பவன் மகா சங்கார காரணன் எனப்படுகின்றான்.
மகாசங்காரம் ஆகிய முற்றழிப்பைச் செய்யும் முதல்வனையே முதற் கடவுளாக உடையது இவ்வுலகம் என்பது மேலே உள்ள கருத்துரையின் பொருளாகும்.
*நூற்பாவின் பொருள்*:
இவ்வுலகம் ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம். எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம் அறிவினால்
சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது.
இவ்வாறு பகதிகளை உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.
அறிவற்றதாகிய உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.
இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.
எனவே ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான் என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் வல்லோர் கூறுவர்.
*பதவுரை:*
*அவன் அவள் அது எனும் அவை* - அவன், அவள் என்று சுட்டிக் குறிப்பிடும் உயர்திணைப் பொருள்களையும், அது என்று சுட்டிக் குறிப்பிடும் அஃறிணைப் பொருள்களையும் தனது பகுதிகளாக உடைய இவ்வுலகமாகிய தொகுதி
*மூவினைமையின்* - தோன்றி, நின்று, அழியும் தன்மை உடையதாய் இருத்தலின்
*தோற்றிய திதியே* - அஃது உள்பொருளேயாகும்; மேலும் ஒருவன் தோற்றுவித்ததாகும்.
*ஒடுங்கி உளதாம்* - இவ் வுலகம், தான் தோன்றுவதற்கு முன்பு அவனிடத்தில் ஒடுங்கி நின்றது. ஒடுங்குதற்கு இடமாய் நின்ற அவனிடத்தினின்றும் அது மீளத் தோன்றுவதாகும்.
*மலத்தால்* - தன்னிடம் ஒடுங்கி நின்ற இவ்வுலகத்தை அவன் தோற்றுவிப்பது எதன் பொருட்டு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய மாசினை நீக்குதற் பொருட்டேயாகும்.
*அந்தம் ஆதி* - முற்றழிப்புக் காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் தன்னிடம் ஒடுக்கி முடிவை உண்டாக்குகின்ற அழித்தற் கடவுளே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர்.
*என்மனார் புலவர்* - இவ்வாறு கூறுவர் அளவை நூல் உணர்ந்த அறிஞர்.
*சிறப்புரை:*
அவை என்பதற்குத் தொகுதி என்பது பொருள். மக்கள் பலர் திரண்டு கூடியுள்ள இடத்தை அவை என்றும், அவைக்களம் என்றும் குறிப்பிடும் வழக்கினை இங்கு நினைவு கூரலாம்.
தோற்றிய என்பதற்குத் தோற்றுவித்த என்பது பொருளாகும். தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல், தோற்றிய எனப் பிற வினையாகக் கூறியதனால், இவ்வுலகம் தானே தோன்றாது என்பதும், தன்னைச் செயற்படுத்தும் முதல்வன் ஒருவனை உடையது என்பதும் உணர்த்தப்பட்டது.
திதி என்னும் வடசொல்லுக்கு நேரான பொருள் நிலை என்பது. இவ்விடத்தில் அச்சொல் அப்பொருளைத் தராமல், உள்ளது என்னும் பொருளைத் தந்தது.
ஒடுங்கி என்பது பெயர். ஒடுங்குதற்கு இடமாய் உள்ளவன் என்று அது பொருள்படும்.
ஒடுங்கி உளதாம் என்ற தொடரை ஒடுங்கியினின்று உளதாம் என அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.
மலத்து என்பதனை மலத்தால் என வைத்துக் கொள்ள வேண்டும்.
நோயால் மருத்துவரை அணுகினான் என்றால், நோய் நீங்குதல் காரணமாக மருத்துவரை அணுகினான் என்று பொருள் கொள்கிறோம். வறுமையால் வள்ளலை நாடினான் என்றால், வறுமை நீங்குதல் காரணமாக வள்ளலை நாடினான் எனப் பொருள் கொள்கிறோம். அவ்வாறே இங்கும் மலத்தால் உளதாம் என்பதற்கு மலம் நீங்குதல் காரணாக உலகம் உளதாயிற்று எனப் பொருள் கொள்ள வேண்டும்.
அந்தம் என்றால் முடிவு; ஆதி என்றால் முதல் என நாம் அறிவோம். ஆனால் அச்சொற்கள் இங்குக் குறிக்கும் பொருள் அவையல்ல. அந்தத்தைச் செய்பவனை அழித்தற் கடவுளை அந்தம் என்றார் ஆசிரியர்; முதலாய் நிற்பவனை- முதற் கடவுளை ஆதி என்றார். எனவே அந்தம் ஆதி என்ற தொடரால், முற்றழிப்பைச் செய்பவனே முதற் கடவுள் என்றாராயிற்று.
அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.
விளக்க உரை - தினமலர் தளத்திலிருந்து - http://temple.dinamalar.com/news.php?cat=659
உலகின் தெருக்கள் எங்கும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
சிவஞானபோதம் சிந்தனைகள் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக