இறைவன் எங்கே இருக்கிறான் ?
இந்த உலகையும் உயிரினத்தையும் படைத்த இறைவன் எங்கே இருக்கிறான் ?
இது மிகவும் எளிதாக எல்லோருக்கும் தோன்றும் கேள்வி தான். ஆனால் இது மிகவும் ‘சக்தி வாய்ந்த’ கேள்வி. இதற்கு விடை தேடுங்கள். இவனை பற்றி சிந்தியுங்கள். இவன் எங்கு இருக்கிறான் என்று தேடுங்கள். அவ்வாறு தேடும் போது உங்கள் அக கண்களையும் திறந்து வைத்துகொண்டு தேடுங்கள். அக கண் என்பது அவனைப்பற்றி அறிந்து கொள்ளகூடிய புரிந்து கொள்ளக்கூடிய சக்தி அல்லது முயற்சி. அவனைத் தேடுங்கள். தேடிக்கொண்டே இருங்கள். கண்மூடி அந்த இருளில் தேடுங்கள். கோவில்களில் இருக்கிறானா, அங்கு சென்று தேடுங்கள். வானத்தில் தெரிகிறானா அதையும் ஆராய்ந்து பாருங்கள். அவனைக் காணும் வரை, முயற்சித்து கொண்டே இருங்கள். எவ்வழி தோன்றுகிறதோ, அவ்வழியில் சென்று தேடுங்கள். அவனை காணும் வரை உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். ஓர் நாள், உறுதியாக உங்களுக்கு காட்சி கொடுப்பான். அவனிருப்பதை உங்களுக்கு உணர்த்திடுவான். முயற்சி செய்யாமல், வீணாக விழித்திருப்போர்க்கும், வீண் வாதம் செய்வோர்க்கும் அவன் தன்னை காட்ட மாட்டான். கேள்வி கேட்டு கொண்டே இருங்கள். உங்களுக்கு விடையாக அவன் தன்னை உணர்த்துவான். உங்களின் தேடல் அவன் திருவடிகளில் முற்றும். அதுவரை தேடிக் கொண்டே இருங்கள்.
இன்று நாம் காணும் இறைத் தோற்றங்கள், அவன் நம் முன்னோர்களுக்கு தன்னைக் காட்டிய தோற்றமே. யாரோ எப்படியோ வரைந்த படங்கள் அல்ல. அவனையே நினைத்து கொண்டிருங்கள். அவனைப் பற்றியே சிந்தித்திருங்கள். நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நூறு அடி உங்களை நோக்கி எடுத்து வைப்பான் என்பது உண்மை. இறைவன் தன்னை பல வழிகளில் நமக்கு உணர்த்துகிறான். இறைவனை அன்பின் வழியில் சென்று காணலாம். பிற உயிரினங்களுக்கு தொண்டு செய்து காணலாம். அவனையே சிந்தித்திருந்து காணலாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் இங்கே இருக்கிறார். இறைவனை ஜோதியாய் கண்டவர் எண்ணிலாதவர். இறைவனைக் காண வழிகள் பன்னூறு. அதாவது அவன் நமக்கு பல வழிகளில் தன்னை உணர்த்துகிறான்.
இறைவனோடு உரையாடியவர் பலர். அவனைக் கண்டவர் பலர். அவன் ஆட்கொண்டவர் பலர். அவன் சொன்னதை அசீரீரியாக கேட்டவர் பலர். இறை அனுபவம் என்பது அவனை தேடி அடைந்தவர்களுக்கே கிடைக்கும். இவ்வுலகில் நாம் செய்ய முடிந்த சிறந்த செயல் எது ? இவ்வுலகில் கிடைத்தற்கரிய பொருள் எது ? அவனை கண்டு அவன் அருளைப் பெறுவதை தவிர தலைசிறந்தது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லைஅவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லைபுவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்தவனச் சடைமுடித் தாமரை யானே.அவனை ஒழிய அமர்ரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவனன்றி மூவரால் ஆவதொன் றில்லைஅவனன்றி ஊர்புகு மாற்றி யேனே.
என்கிறார் திருமூலர். இறைவனை கண்டவரும் உரையாடிவரும் பல செய்யுள்களை நமக்கு அருளி இன்றும் நமக்கு இறைவனை அடைய பாலத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். நாம் தான் அந்த பாலத்தில் சென்று இறைவனை அடைய வேண்டும். விலைமதிப்ற்ற நம் முன்னோர்கள் நமக்கு அருளித்தந்த செய்யுள்களை படிப்பீர். பயன்பெறுவீர்.
இறைவனே தேடி அவனை அடைந்து அவன் அருள் பெற்று அவனடி சேர்வீர். வாழ்க வளர்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக