முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?



சிவமயம்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். திருச்சிற்றம்பலம். 

1. தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.
2. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.
3. இயற்பகை நாயனார்: யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
4. இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
5. மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.
6. விறன்மிண்டர்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.
7. அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
8. எறிபத்த நாயனார்: சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
9. ஏனாதிநாத நாயனார்: வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..
10. கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.
11. குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
12. மானக்கஞ்சாறன்: தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.
13. அரிவாட்டாயர்: நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.
14. ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
15. மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.
16. முருக நாயனார்: தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.
17. உருத்திர பசுபதியார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
18. திருநாளைப் போவார் (நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
19. திருக்குறிப்புத் தொண்டர்: தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
20. சண்டேசுவரர்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.
21. திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.
22. குலச்சிறை நாயனார்: கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
23. பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
24. காரைக்காலம்மையார்: சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.
25. அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.
26. திருநீல நக்க நாயனார்: ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
27. நமிநந்தியடிகள் நாயனார்: தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
28. திருஞானசம்பந்தர்: பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.
29. ஏயர்கோன்கலிக்காமர்: சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.
30. திருமூல நாயனார்: கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.
31. தண்டியடிகள்: திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..
32. மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
33. சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
34. சாக்கிய நாயனார்: புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.
35. சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.
36. சிறுதொண்டர்: சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.
37. கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.
38. கணநாதர்: சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.
39. கூற்றுவ நாயனார்: பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.
40. பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
41. புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
42. நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.
43. அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.
44. கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
45. கலியநாயனார்: தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.
46. சத்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
47. ஐயடிகள் காடவர்கோன்: ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.
48. கணம்புல்ல நாயனார்: சிவாலயத்தில் திருவிளக்கேற்றி தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.
49. காரி நாயனார்: காரிக் கோவை நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.
50. நின்றசீர் நெடுமாறன்: கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.
51. வாயிலார்: சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.
52. முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.
53. கழற்சிங்க நாயனார்: போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
54. இடங்கழி நாயனார்: சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.
55. செருத்துணை நாயனார்: கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.
56. புகழ்த்துணை நாயனார்: சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.
57. கோட்புலி நாயனார்: சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
58. பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
59. பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.
60. திருவாரூர்ப் பிறந்தார்: திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.
61. முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
62. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
63. முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
64. அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.
65. பூசலார் நாயனார்: மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.
66. மங்கையர்க்கரசியார்: நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.
67. நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.
68. கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.
69. திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.
70. சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.
71. இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.
72. சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.
ஓம் நமசிவாய
சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் சாதிபேதம் பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.



திருச்சிற்றம்பலம்.

இந்த 2 பக்கம் கொண்ட தொண்டு குறிப்பை ஒரே தாளில் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கு வழங்கிடுங்கள். 
What did 63 Nayanmars do ? Tamil. Take a print out of this in a single paper or print as a notice and provide it to the people that come to the temple. This is a great service any one can do easily.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக