முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

வெள்ளி, 6 மே, 2016

அன்பு நெறியை உலகிற்கு முதலில் சொன்னது யார் ? புழுவாய்ப் பிறக்கினும்.. அந்தணர்கள் யார் ? மதமாற்றம் ?

 வாட்சேப்பில் பதியக்கூடிய பதிவுகள். whatsapp pastable posts articles.
 

அன்பின் நெறியை உலகில் பரவியது யார் ? அதை வழுவாமல் கடைப்பிடிப்பது யார் ?  அன்பை பற்றி யாருக்கு யார் போதனை செய்ய வேண்டும் ? 

 

திருச்சிற்றம்பலம். முழுவதும் கட்டாயம் படியுங்கள்.
இயற்கை வளம் சூழ்ந்த பறம்பு மலையை சுற்றி முன்னூறு ஊர்களைக் கொண்டது பறம்பு நாடு. அந்த நாட்டை ஆண்ட மன்னர் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார். அவரது நாட்டில் இரவலர்களே இல்லாமல் போயினர். மக்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஓர் நாள் பறம்பு மலையைப் பார்க்க தன் தேரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் அந்த மன்னர். அருவிகளின் ஓசை, மலையின் அழகு என்று இயற்கையின் அத்தனை அழகையும் ரசித்துக் கொண்டே வந்தார். மலைப்பகுதி வந்தவுடன் தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்த மணிகள் அத்தனையும் அகற்றச் சொன்னார். காரணம், அந்த சத்தத்தைக் கேட்டு விலங்குகள் அஞ்சி ஓடாமலிருக்க. மான்கள், மயில்கள், வண்டுகள், தும்பிக்கள் என்று அனைத்தையும் பார்த்து மகிழ்ச்சியுற்றார் மன்னர். தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஆங்கே, ஓரிடத்தில் முல்லைக் கொடி ஒன்றுக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் அந்தக் கொடி காற்றில் அங்கும் இங்கும் ஆடி அலைந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட மன்னரின் உள்ளத்தில் அந்த முல்லைக் கொடியின் உணர்வுகள் அப்படியே தன் உணர்வுகளாய் உள்ளத்தில் பாய்ந்து, அந்தக் கொடியின் மீது இருந்த அன்பினால் அவர் உள்ளம் துடிதுடித்தது. ஆ என்று அலறி தேரிலிருந்து குதித்தார். முல்லைக் கொடியின் அருகில் சென்று தள்ளாடித் தவிக்கும் அந்த கொடியைப் பார்த்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பி வழிந்தோடியது. முல்லைக் கொடியின் உணர்வுகளை மன்னர் தன்னுடைய உணர்வாக உணர்ந்து அழுதார். முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும் அசைந்து துன்புறுகிறாய். இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே. என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.

பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார். தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர். குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார். அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார். இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள். அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.
இன்னும் எத்தனை எத்தனை வள்ளல்கள் வாழ்ந்த மண் இது ? நியாயம் கேட்ட கன்றுக்காகத் தன் மகன் இளவரசனையே தேரில் ஏற்றி நீதியை நிலை நாட்டி திருவாரூரில் வாழ்ந்தவன் மனுநீதிச் சோழன். இவ்வாறு எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி அன்பே சிவம் என்று வாழ்ந்தது இந்த பாரத பூமி. எத்தனை பெருமை வாய்ந்தது நம் புண்ணிய பூமி ? அந்தப் புண்ணிய பூமியில் நாம் பிறந்து வளர எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?
ஆனால், இன்றோ, மேலை நாட்டிலிருந்து தங்கள் மதங்களைப் பரப்புவதற்காக, பல்லாயிரம் காலமாக எண்ணிலடங்காத மனிதர்களையும் விலங்குகளையும் கொன்று விட்டு, இன்றும் தம் உடல் பெருக்க உயிர்களைக் கொன்று அதை தின்றுவிட்டு, நம்மிடம் நேசத்தையும் அன்பையும் போதிக்க படையெடுத்து வருகிறார்கள் ? யார் யாருக்கு அன்பைப் பற்றி போதிப்பது ?
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் - திருமூலர்.

திருச்சிற்றம்பலம்.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

இந்தியாவில் மதமாற்றம் ஏன் நிகழ்கிறது ? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?


நம் சமயத்தின் அடிப்படை செய்திகள் கூடத் தெரியாமல் நம் நாட்டில் 99 சதிவிகிதம் உள்ளோம். திருநீறு ஏன் பூசுகிறோம், நம் சமய நூல்கள் எவை ? நம் குருமார்கள் யார் ? நம் கோவில்கள் ஏன் எதற்கு இவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது போனற நம் சமயத்தின் அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாமல் இருக்கிறோம். சும்மாவா ? 14 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை நாம் அடிமைகளாகவே பல தலைமுறைகளாக வாழ்ந்து பழகிவிட்டோமே. நம்மை எப்பவுமே நாமே தாழ்த்தி தாழ்த்தியே நமக்கு பழகி விட்டது. மேற்கத்திய மோகமே இதற்கு சான்று. இவ்வாறு நம் சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதாலேயே நாம் இருளில் இருக்கிறோம். இந்த இருளை பயன்படுத்தித் தான் அந்நிய சமயங்கள் தங்கள் கொள்கைகளை பரப்பி மதமாற்றம் செய்து வருகின்றன. உண்மையான உலக வரலாறு தெரிந்தவரும், நம் சமயம் பற்றிய நுண்ணிய கொள்கைகளை உணர்ந்தவரும் கட்டாயம் மதம் மாறமாட்டார்கள்.

அப்போ, மதமாற்றத்தைக் கட்டுப்படுத்த இன்றைக்கு நாம் செய்ய வேண்டியது யாது ?

முதலில் நம் சமயத்தைப் பற்றி நாம் நன்றாக ஆழமாக தெரிந்து கொள்வோம். பின்னர் அதை நமக்குத் தெரிந்த எல்லோருக்கும் அதைச் சொல்வோம்.

நம் சமய ஒளி வளர வளர, இருள் நீங்கிப் போகும். புற சமயங்கள் கூறும் பொய்யுரைகள் வெளியே வரும். 2000 ஆண்டில் இயேசு வருகிறார் என்பது எப்படிப்பட்ட பொய் ?  இந்த பொய்யை நம்பி பயந்து பயந்து மதம் மாறிய குடும்பங்கள் எத்தனை லட்சம் ? இதே பொய்களை அவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவார்கள். பல்வேறு பொய்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பொய்க்கும் ஒவ்வொரு விதமான மக்கள் பலியாகின்றார்கள். ஆகவே, நம் சமயத்தை பற்றி நன்கு அறிந்தால், அவர்கள் உரைக்கும் பொய் நமக்கு தெளிவாகத் தெரியும்.

இரண்டாவதாக, நம் இறைவனை உணர்ந்து, அவனிடம் சரணடைந்து, அவனுக்கே அடிமையாகி, சிவ பணியே கதி என்ற நிலைக்கு நாம் வரும் போது, அந்த பேரின்பம் நமக்கு தெரியும். இந்த உலக இன்பங்கள் யாவும் சிற்றின்பங்களாக இருப்பதை உணர்வோம். அப்போது, நாம் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கும் போது, வேறு எந்த தொந்தரவும் நமக்கு வேண்டாம். இது ஒரு தவம். இறைவனை நோக்கிய தவம். தவத்தைக் கலைக்கும் பிற செய்திகள் நமக்கு விருப்பமில்லாதவையாகி விடும்.அத்தகைய தவ நிலையில் நாம் இருக்கும் போது நமக்கு என்றும் இன்பமே கிடைக்கும்.

ஆகவே, நம் சமயத்தை அறிந்து கொள்ள நம் நேரத்தை செலவிடுவோம். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வோம். நமக்குத் தெரிந்தவற்றை கட்டாயம் நம் நண்பர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். தெருவில் இருப்பவர்களும் ஊரில் இருப்பவர்களும் கோவிலுக்கு வருபவர்களும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி சமய வகுப்புகள், குரு பூஜைகள் நடத்துவோம். மனிதனாக பிறந்தவன் ஏதாவது ஒரு சின்ன செயலையாவது செய்து சாதிக்க வேண்டும். வெறுமனே யாருக்கும் பயனில்லாமல் போவது பிறப்பிற்கே நாம் செய்யும் பாதகம். ஆகவே சமய பணிகளில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டு அதில் கிடைக்கும் நிகரற்ற இன்பத்தை நுகருங்கள்.

கிறிஸ்தவ நிகழ்ச்சிகளின் போஸ்டர்களைப் பார்த்திருக்கின்றீர்களா ? அதில் பிரசங்கம் செய்பவர்களின் முகத்தை உற்றுப் பார்த்தீர்களா ? எத்துனை தகுதியுடைய நீங்கள் எல்லாம் உங்கள் கடமைகளைச் செய்யாமையினாலேயே அவர்களுக்கு அந்த செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். சிங்கம் தூங்குவதால் எலிகள் பேயாட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றன. புண்ணிய பாரத பூமியை சீர் செய்வதில் நீங்களும் ஒரு செங்கல்லையாவது எடுத்துப் போடுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

ஒலிகளும் மந்திரங்களும் வேதங்களும் அந்தணர்களும்


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்றார் அப்பர் பெருமான். ஒவ்வொரு ஒலியும், அலைகளாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் நம் தலைவர் திகழ்கிறார். ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அது பிறர் மீது ஏற்படுத்தும் விளைவுகளும் உண்டு. கிரீரீச்ச்ச் என்று கட்டிலை இழுக்கும் போது எழும் சத்தம் நமக்கு எரிச்சலைத் தருகிறது. சிவன் கோவிலில் ஓதுவார்கள் பண் இசைத்து பாடும் போது நம்மையே மறந்தும் போகிறோம்.  இதை முற்றிலுமாக ஆராய்ந்து தான் நம் முன்னோர்கள் வேத மந்திரங்களை உருவாக்கினர். ஒலிகளுக்கு சக்தி இருக்கிறது என்று இன்றைய நவீன மேலை நாட்டு விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டு ஆராய்ந்து வருகிறது. அல்ட்ரா சவுண்டு (ultrasound) எனப்படும் ஒலியால் இயங்கக்கூடிய பல்வேறு கருவிகளை இதிலிருந்து தான் உருவாக்கியுள்ளனர். உடலுக்குள் இருக்கும் உறுப்புகளின் வடிவங்களை, உடலை அறுக்காமலேயே, ஒலி அலைகளை அனுப்பி அவை திரும்பி வரும் நேரத்தை பதிவு செய்து உள் உறுப்புகளின் வடிவங்களைப் பதிவு செய்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வடிவத்தை பார்ப்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிப் போய்விட்டதை நீங்கள் அறிவீர்கள்.  கடலுக்குள் அடியில் இருக்கும் பொருட்களை அறியவும் (Sonogram) ஒலி அலைகள் உதவுகின்றன என்பதை படித்திருப்பீர்கள்.

நாம் ஓதும் வேத மந்திரங்களுக்கு அதீத சக்தி உண்டு. இதனாலேயே ஒவ்வொரு வழிபாட்டின் போதும் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்களே ஓதினர். இந்த ஒலி அலைகள் சுற்றியிருக்கும் மனிதர்களின் உடலிலும் மனதிலும் நல்ல அதிர்வுகளை உருவாக்கும். இந்த ஒலி எழுப்புவதற்கு சிறப்பு பயிற்சி தேவைப்பட்டது. எல்லோராலும் எழுப்ப முடியும் என்றாலும் சிறப்பான பயிற்சியின்றி இதைச் செய்ய முடியாது. இதனாலேயே நம் முன்னோர்கள் ஒரு சிலருக்கு வேத பயிற்சி கொடுத்து அதை ஓதுவதையே அவர்கள் தொழிலாக மேற்கொள்ளச் செய்தனர். இவர்களே அந்தணர்கள் என்று அழைக்கப்பட்டனர். நம் வேதங்களை முறைப்படி கற்று ஓதி என்றென்றும் காக்க நம்மால் உருவாக்கப்பட்டவர்களே அந்தணர்கள். ஆகவே தான் அந்தணர்கள் நம் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
உலக நன்மையின் பொருட்டும் உயிர்களின் துன்பங்கள் நீங்கும் பொருட்டும் என்றென்றும் வழிபாடு வேள்வி செய்யும் அந்தணர்கள் என்றும் நீடூழி வாழ வேண்டும். அந்த வேள்வியை சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்களும் என்றென்றும் வாழ வேண்டும். அந்த வேள்விகளினால் மழை என்றும் தவறாது பெய்ய வேண்டும். சிவ ஆலயங்களையும் பூசைகளையும் தவறாது செய்து வரும் அரசனும் என்றென்றும் ஓங்கியிருக்க வேண்டும். வேள்விகளால் வரும் நன்மைகளை அடையவிடாமல் தடுக்கும் தீய சக்திகள் எல்லாம் ஆழ்ந்து போக வேண்டும். உலகமெங்கும் சிவபெருமானின் நாமமே ஒலிக்க வேண்டும். இவ்வுலகில் இருக்கும் அனைத்து துயரங்களும் தீர்ந்து போக வேண்டும்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
-- 3 ஆம் திருமுறை, திருஞானசம்பந்தர்.


பொழிப்புரை :

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.
திருச்சிற்றம்பலம்.

மீண்டும் பிறவி வேண்டுமா ?


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தபோது ஒருவர், “நான் ஏன் பிறந்தேன் என்பதற்கு ஒரே வரியில் எனக்கு விளக்கம் அளிக்க முடியுமா?” என்று கேட்டார். சுவாமிகள் சிரித்துவிட்டு, “மீண்டும் பிறக்காமல் இருப்பதற்காகப் பிறந்திருக்கிறாய்” என்றார். கேட்டவர் விழித்தார். சுவாமிகள் தொடர்ந்தார். “ஆம். மீண்டும் பிறவி வலையில் சிக்காமல் இருப்பதற்காக இந்தப் பிறவியில் நல்லவனாக வாழ்ந்து வினைகளை நீக்கி மீண்டும் பிறவா நிலையை நீ அடையவேண்டும் என்பதற்காக இறைவன் உனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறான்” என்றார். சாதாரண பாமர மனிதன் தொடங்கி அருளாளர்கள் வரை மீண்டும் பிறக்க வேண்டாம் என்றே விரும்புகின்றனர். பிறவியைத் துன்பம் என்றும் நோய் என்றும் வருணிப்பர். ஆனால் மீண்டும் பிறக்க விரும்பியவர் ஒருவர் உண்டு. அவர்தாம் நமது வாகீசர் பெருமான். இறைவனுடைய பேரழகைக் காணவும் அவனை ரசிக்கவும் அவனை அனுபவிக்கவும் வேண்டுமானால்,

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

என்றார். இவரைப் போன்றே ஏனைய நாயன்மார்களும் சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலையில் இருந்தவர்கள். இவர்கள் முத்தி இன்பத்தையும் விரும்பவில்லை. இவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்த பண்பாளர்கள். நாயன் என்ற சொல் நாயகனாகிய சிவனைத் தவிர மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது அவனையே தனது வாழ்வின் மற்றும் உயிரின் நாயகனாகக்கொண்டும், சித்தத்தைச் சிவனோடு நிறுத்தியும், சிவனடியார்களையும் சிவச் சின்னங்களையும் சிவமாகவேப் பாவித்து, மூவாசைகளையும் துறந்து, துஞ்சிருள் காலை மாலைத் தொடர்ச்சியை மறந்திராது இருந்த நாயன்மாரைக் குறிக்கும். சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத்தொகையில் தன்னை இறுதியில் வைத்து 63 நாயன்மார்களைப்பற்றியும், தொகையடியார்களாக 9 பிரிவினரையும் சேர்த்து 72 நாயன்மார்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறார். சேக்கிழார் வாக்கில் இவர்கள் வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள். அப்படிப்பட்ட நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். சேக்கிழார் பெருமான் மலரடிகள் போற்றி போற்றி.

திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.

புழுவாய்ப் பிறக்கினும்.......

ஆளுடைய அரசர் மலரடிகள் போற்றி போற்றி !!!
நாம் எத்தனை பிறவிகள் எடுத்து தற்போதைய பிறவியில் இருக்கிறோம் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. நமக்கு முக்தி எப்போது கிட்டும், அதற்குரிய தகுதியை நாம் எப்போது எட்டுவோம் என்பதையும் நாம் அறியோம். எது எப்படியாயினும், இன்னும் பிறக்கும் ஒவ்வொரு முறையும், சிவபெருமானை, உன்னை என்றும் மறவாமல் உன் நாமத்தை சொல்லும் பாக்கியத்தைக் கொடுமய்யா. அடுத்த பிறவியில் புழுவாகப் பிறந்தாலும், புண்ணியமே வடிவான உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதவாறு அருள் புரிய வேண்டும் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து அருள் செய்யும் ஈசனே !!!

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே.  

பொழிப்புரை :

இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.

ஆணவம் என்பது என்ன ?

நம் நடைமுறை வழக்கு மொழியில் ஆணவம் என்றால் திமிர் அல்லது செருக்கு என்ற பொருளில் நாம் கொள்கிறோம். ஆனால், சைவ சமயம் கூறும் ஆணவம் அதுவல்ல. இரண்டும் வேறு பொருளைக் குறிக்கின்றன.
இந்த அண்டம் முழுவதும் இருள் கவ்வியிருக்கிறது. அந்த இருளை விலக்கி நம் கண்கள் பார்க்க, சூரியன் ஒளியைத் தருகிறது. சூரிய ஒளி எங்கும் பரவியிருப்பதால் நம்மால் எப்பொருளையும் காண முடிகிறது. சூரிய ஒளி இல்லாத இடம் இருட்டாக இருக்கிறது. இருள் நம்மால் பார்த்து உணரக்கூடியதாக இருக்கிறது. பிறந்து வளரும் உயிர்கள் இறைவனை அறிய முடியாத படி இருக்கின்றன. இதனால் உலகப் பொருள்களில் மயங்கி அதிலேயே இலயித்துப் போய் துன்பங்களை அனுபவிக்கின்றன. இவ்வாறு உயிர்கள் இறைவனை அறிய முடியாத வண்ணம் ஒரு பொருள் இயற்கையிலேயே மறைத்து இருக்கிறது. இந்த பொருளைத் தான் சைவ சமயம் ஆணவம் என்று கூறுகிறது. இருளாவது, தான் கொண்டிருக்கும் பொருளை மறைத்துக் கொண்டு தன்னை வெளிக்காட்டும். அதவாது இருட்டு ஒன்று இருக்கிறது என்று நம்மால் பார்த்து உணர முடிகிறது. அதற்குள் இருக்கும் பொருளைத் தான் நம்மால் பார்க்க இயலவில்லை. ஆனால், இந்த ஆணவத்தை நம்மால் பார்க்க இயலாது. ஆகவே, ஆணவம் தன்னையும் மறைத்துக் கொண்டு உயிர்களுக்கு இறைவனையும் மறைத்து நிற்கிறது. இதனால், இது இருளினும் இருள் எனப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்.

பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.
 திருச்சிற்றம்பலம்.

சிவ நாம மகிமை.


முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமானபாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன. இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள்  தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்தகோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும்உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர்உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே  எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ்பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை.சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள்
நீங்கும்.மனம் தூய்மை அடையும்.
ஓம் நமசிவாய.


1 கருத்து: