முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திங்கள், 28 மார்ச், 2016

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ? RIP ? சித்திரசபை

whatsapp shaiva shiva siva pastable news. வாட்சேப்பில் பதிவு செய்யக்கூடிய நகல் செய்து ஒட்டக்கூடிய சிவ சைவ செய்திகள் 5 
திருச்சிற்றம்பலம்.

சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?

சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும்.

1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். அவர்களின் வினாக்களுக்கு தகுந்த விடையளிக்க வேண்டும். (அதற்கு முன்னர், அந்த கேள்விகளுக்கு நமக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும் !!!)

2. குழந்தைகள் எளிதில் பாடல்களை மனனம் செய்து விடுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு சிவபுராணம் முதலிய திருமுறை பாடல்களை, புத்தகங்களை படிக்க கொடுத்து, தினமும் காலையில் சில பதிகங்கள் ஓதி, தோப்புக்கரணம் போட்டு பூசை செய்ய சொல்ல வேண்டும். இதற்கு 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை தான் ஆகும். ஆனால், இது மிக முக்கியமானது.

3. சமயகல்வி மிகவும் இன்றியமையாதது. சைவப் பாடம் என்ற பாடம் முன்பு நம் பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டு வந்தது. தற்போது பெற்றோர்கள் தாம் தம் குழந்தைகளுக்கு போதிய சமயகல்வி கொடுப்பது இன்றியமையாததாகிறது. பன்னிரு திருமுறை, சமய குரவர்கள், நம் சின்னங்கள், 63 நாயன்மார்கள் வரலாறு, நம் சமய நூல்கள் எவை, சமய சின்னங்கள் எவை போன்ற அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2-4 மணி நேரம் சமயகல்வி வகுப்புக்கு அனுப்புவது மிக மிக அவசியம்.

4. திருவிளையாடல், திருவருட்செல்வர், அகத்தியர், ராஜராஜ சோழன், பட்டினத்தார், ஔவையார், காரைக்கால் அம்மையார், நந்தனார், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், சம்பூர்ண ராமாயணம் போன்ற எண்ணற்ற அருமையான சினிமா படங்கள் உள்ளன. அவ்வப்போது குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு அந்த கதைகளை பற்றி உரையாடிக் கொண்டே பாருங்கள்.

5. தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக உரையாட கற்றுக்கொடுங்கள். தமிழில் ஆங்கிலத்தை கலப்பது வேண்டவே வேண்டாம். ஆங்கிலம் கலக்காமல் தமிழ் நன்றாக தெரிந்து பேச வேண்டும். இரண்டையும் கலந்து பேசுவது கூடாது.

6. சுற்றுலாக்களுக்கு செல்லும் போதும், மற்ற விடுமுறை நாட்களின் போதும், திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி, மதுரை, திருநெல்வேலி, அவிநாசி, திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலை, திருவாலங்காடு, குமரனின் 6 படை வீடுகள் என்று எண்ணற்ற தலங்கள் உள்ளன. அவ்வாறான புகழ்பெற்ற தலங்களுக்கு அழைத்து சென்று அதனோடு தொடர்புடைய புராண வரலாறுகளையும் தலவரலாறுகளையும் அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

7. உங்கள் குழந்தைகள் புறசமயத்தினர் பள்ளிகளில் படிக்கும் போதோ, புறச்சமய நண்பர்களுடன் பழகும் போதும், அவர்களோடு எவ்வாறு பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை தேவையுள்ளவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. முடிந்த மட்டில் கிறிஸ்தவ / முஸ்லிம் பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்காதீர்கள். பெரும்பாலானவர்களின் குறிக்கோளே, கல்வி மூலம் மதமாற்றம் செய்வது.  வேறு வழியின்றி அவ்வாறு சேர்க்கும் நிலை ஏற்பட்டால், நம் சமய வழிமுறைகளை வலுவாக தினமும் பின்பற்றக் கூறி, கடைப்பிடிக்கவும் வேண்டுமாறு செய்திடுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

 

நாரை சொல்லும் செய்தி


திருச்சிற்றம்பலம்.

திருஆலவாய் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பொற்றாமரை குளத்திற்கு வந்த நாரை 4 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறைவன் திருவடியை சேர்ந்தது. இந்த நிகழ்வு கூறுவது யாது ?

1. அனைத்து உயிர்களுக்கும் இறைவனை உணரும் திறன் உள்ளது. அந்த ஈசன் எல்லா உயிர்க்கும் இயல்பானவன். அவன் தான் நம் தலைவன் என்பது உணர்த்தப்படுகிறது.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ


என்ற மாணிக்கவாசகரின் திருச்சாழல் பாடல் வரிகளை உணர்த்துகிறது.

2. இன்றைய பல சமயங்கள் கூறுவது போல, இறைவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல. அவன் பாலுக்கும், எவ்வுயிர்க்கும் அப்பாற்பட்ட பரம்பொருள். அந்த பரம்பொருளாகிய சிவம் அருட்பெரும் சோதியாக தன்னை வெளிப்படுத்தும். அந்த சிவத்தை எல்லா உயிரும் தொழும்.

3. உண்ணா நோன்பும் இறை உணர்வும் எல்லா உயிரினங்களும் அறிந்து கடைப்பிடிக்கும் ஒன்று என்பது புலனாகிறது.

4. அதிசயங்கள் எக்காலத்திலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. சிவனடியார்கள் எக்காலத்தும் இருப்பர். சிவனடியார்கள் எந்த வடிவிலும் இருப்பர். நாம் இதை நம் அகக் கண்களை திறந்து அறிந்து உணர வேண்டும்.

5. நம் புராணங்கள் வெறும் கதை அல்ல. அவை வரலாற்று நிஜம். அவை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத அநாதியான பரம்பொருளை உணர்ந்து, நம் இல்லத்திற்கு அழைத்து தினம் திருமுறை பாடல்களால் ஏத்தி தினம் தொழுவோம். அதுவே நாம் அனைவரும் பெற்ற புண்ணியமும், நம் பிறவியின் குறிக்கோளும் ஆகும்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.

மனிதநேயப் பரிவு

 
சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும், நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே

(திருமந்திரம் : -1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்)
அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
திருச்சிற்றம்பலம்.

மரமும் யானையும்

உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே

(திருமந்திரம் : -2290)

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி


நந்தி என்பது சிவபெருமானின் பெயர். அந்த நந்தியே நமக்கு குருவாகவும் இருந்து வழிகாட்டுகிறார். உயிர்களாகிய ஆன்மாக்கள் முப்பெரும் மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றுடன் ஒட்டியே உள்ளன. நெல்லும் உமியும் போல. மலங்களோடு உழல்வதால், இறைவனை மறந்து சிற்றின்பங்களில் திளைத்து திரிகின்றன. இதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த மலத்தை நீக்கினால், இறைவன் திருவருளைப் பெறலாம். இந்த மலத்தை நீக்குவதற்கே இறைவன் திருவருள் வேண்டும். அதை அவ்வுயிர்கள் வேண்டி நிற்க வேண்டும். அவ்வாறு அந்த மலத்தை அறுத்து ஞானத்தை அளிக்க வல்லது அந்த சிவம் ஒன்றே. ஆகவே, அந்த மலங்களை அறுக்க வல்லவன் திருப்பாதம் வாழ்க என்கிறார் திருமூலர். மலமறுத்து நலமுற மன்னுவித்தது திருவடியுணர்வு. அதனால் மெய்ஞ்ஞானத்தவன்தாள் வாழ்க என்றனர். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனாதலின் மலமிலான் பாதம் வாழ்க என்று ஓதியருளினர். திருவடி, பதம், தாள், பாதம் நான்கும் ஒருபுடையொப்பாக நன்னெறிநான்மை நற்றவப்பேற்றினைக் குறிக்கும். இதனை, 'சீலமடி நோன்புபதம் தாள்செறிவு பாதமே, ஏலுமறி வாமால் இசை' என நினைவுகூர்க. இதன்கண் காணப்படும் வாழ்த்து எட்டினாலும் சிவபெருமானின் வான்குணம் எட்டும் குறிப்பாகக் குறிக்கப்படும் தனித் தமிழ் மாண்பின் இனித்த மாறா வனப்போர்க. இதனை, 'வாழ்த்தெட்டால் வள்ளல் சிவபெருமான் எண்குணமும், வாழ்த்து தமிழ் தாடலைவாழ் மாண்பு' என நினைவுகூர்க.

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
    : திருமூலர்.

திருச்சிற்றம்பலம்.


திருச்சிற்றம்பலம்.

REST IN PEACE  RIP  - இதை தமிழர்கள், சைவர்கள் பயன்படுத்தலாமா ?


உலகமயமாக்கல் என்ற புயலில், அனைத்து நாட்டினரும், தங்கள் பண்பாடு, மொழி சிதையாத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், இந்தியர்களோ, இதற்கு நேர் எதிர்முகமாக செயல்படுகின்றனர். மேற்கத்தியவர்கள் நம்மை அடியமைக்காக, நம்மை இழிவு படுத்தி, எப்போதும் தாழ்மைப் படுத்தியே வந்தனர். அந்த தாக்கம் இன்னும் நம்மிடம் இருந்து விலகவேயில்லை. மேற்கத்திய மோகம் நம்மை இன்னும் படாத பாடு படுத்துகிறது. மேற்கிலிருந்து எதை எடுத்துக் கொள்ளும் போதும், நம் சொந்த அறிவை பயன்படுத்தி, அதன் பொருளை உணர்ந்து, சரியானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவன் சொல்கிறானே என்பதற்காக, நாமும் அப்படியே சொல்லக்கூடாது. நம் அறிவையும் சிறிதே பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் REST IN PEACE aka RIP.
யாராவது இறந்து விட்டால், அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்கிற அர்த்தத்தில் RIP  பயன்படுத்த படுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளின் படி இது அமைந்துள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின் படி, இறந்த பின் ஒருவர் அவர் கல்லறையிலேயே நிரந்தரமாக தங்கிவிடுவதாக நம்பப்படுகிறது. அவர்களுக்கு மறுபிறப்பும், பிறவிச் சுழல் பற்றியும் தெரியாது. நம் சமய கோட்பாடுகளின் படி, ஒருவர் இறந்த பின்னர், அவரின் வினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறப்பை எடுப்பார். 1930 ல் டெல்லியில் பிறந்த சாந்தி தேவி என்ற பெண் தன்னுடைய முன்ஜென்ம ஞாபகங்களை அப்படியே சொல்ல, காந்தியடிகள் அதை குழு அமைத்து விசாரித்து, மறுபிறவி உண்டு என்பது நிரூபிக்கப்பட்டது. மறுபிறப்பு இல்லாத ஆன்மாக்கள் சிவபெருமான் திருவருளால் முக்தி நிலை அடையும். அவ்வாறு முக்தி நிலை அடைந்த ஆன்மாக்கள், சிவலோகம் சென்று, சாலோகம், சாமீபம், சாரூபம், மற்றும் சாயுச்சியம் என்ற ஏதாவது ஒரு நிலையில் முக்தி கொள்ளும். இறைவன் திருவுளம் கொண்டால் மீண்டும் பூமிக்கு வரும். முக்தி பெறாத ஆன்மாக்கள் மீண்டும் பிறந்து தன் வினை கணக்கை விட்ட இடத்தில் இருந்து துவங்கும். ஆகவே RIP என்பதில் எந்தவித உண்மையும் கிடையாது. அது தவறான கொள்கையாகும். இறந்தவர்களை நாம் நல்ல நிலைப்படுத்த நாம் உபயோகிக்க வேண்டியது, Bless With Mukthi (or Bless Mukthi With to make the acronym BMW - easy to remember). ஆகவே, RIP பதிலாக BMW பயன்படுத்துங்கள்.

திருச்சிற்றம்பலம்.

 

சித்திர சபை


திருச்சிற்றம்பலம்.

ஆதிகாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயில் ஒரு பெருமாள் கோயிலாக இருந்தது. அப்பொழுது, ஒரு சமயம் அகத்திய முனிவர் இந்தத் திருக்கோயிலுக்கு வந்தார். பார்க்க சிவப்பழமாக நெற்றி முழுவதும் விபூதி அலங்கரிக்க சிவனடியாராக அவர் உள்ளே நுழைய, அவரை வைணவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். ‘இனி என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தபடி அவர் வெளியே வந்தார். பின், ஒரு வைணவரைப் போல் கழுத்தில் துளசிமாலை அணிந்து, நெற்றியில் திருமண் தரித்துத் திரும்பவும் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது உள்ளே இருந்த அர்ச்சகர்கள் ஓடி வந்து அவரை வரவேற்று அவரையே பூஜை செய்ய அனுமதியும் தந்தனர். "அட கோவிந்தா! நான் பூஜைக்குத் தேவையான பொருள் ஒன்றும் எடுத்து வரவில்லையே! தயவு செய்து நீங்கள் எனக்கு வாங்கி வரவேண்டும்" என்றார் அகத்தியர். பூசாரியும் சரி என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினார். இதுதான் தக்க சமயம் என்று அகஸ்தியர் கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார். அங்கு நின்ற கோலத்தில் இருந்த பெருமாளைப் பார்த்தார். தன் கையிலிருந்த சில மூலிகைகளைக் கசக்கினார். பெருமாளைப் பார்த்து "குறுகுக! குறுகுக!" என்று கூறியபடியே மூலிகைகளைக் கசக்கி அவர் தலைமேல் பிழிந்தார். பின், தன் கட்டைவிரலால் அழுத்தினார். பெருமாள் குறுகிச் சிவலிங்கமாக ஆனார். இப்படி, அகஸ்தியர் அழுத்தியதால் ஏற்பட்ட வடுவைச் சிவலிங்கத்தின் மேல் இன்றும் காணமுடிகிறது.

பெருமாளின் தலையை அழுத்தி உருவாக்கிய திருமேனி என்பதால் சிவலிங்கத்திற்குத் தலைவலி வருமோ என பயந்து அவரது சிரசில் மூலிகைச்சாற்றினால் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள். பின், இந்தத் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இறைவன் மேனி இங்கு குறுகிப்போனதால் ‘திருக்குற்றால நாதர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார் என்பது வரலாறு. பஞ்ச சபைகளில் இது ‘சித்திர சபை’யாகப் போற்றப்படுகிறது.
திரிகூடமலை, ஞானபுரி, வேடன் வலம் வந்த ஊர், தேவகூடபுரம் என்று இந்த இடத்திற்குப் பல பெயர்கள் உண்டு.

இக்கோயிலில் அருள் புரியும் குற்றாலநாதரின் இடப்புறத்தில் அம்பாள் ஞான சக்தியாக அருள்புரிகிறாள் சக்தி பீடமே சக்தியாக இங்கு விளங்குவது மிகவும் விசேஷம்தான்! இந்தக் கோயில் மஹாபாரதத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறக் கடுந்தவம் இயற்றினான். இதனால் அவன் வெற்றி பெற்று விடுவானோ என்று பயந்து அதைக் கலைக்க மூகன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பி வைத்தான். அர்ச்சுனன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனது தவம் கலையாமல் இருக்க ஒரு வேடன் போல் வந்து மூகனை அழித்தார். ஆனாலும், தவம் கலையவே, வேடனைப் பார்த்த அருச்சுனன் தன் தவம் கலைந்தது குறித்து வேடனுடன் வாதிட்டான். பாதியில் வேடன் மறைந்து விடவே, வந்தது பரமேஸ்வரனே என்பதை உணர்ந்தான். மீண்டும் இறைவனைக் காணத் துடித்தான். இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகத் தான் கொண்டு வந்திருந்த பெட்டியை எடுக்கச் சென்றால், அங்கு அதைக் காணவில்லை.

‘இது என்ன? பூஜைப் பெட்டியைக் காணவில்லையே! இது என்ன அபசகுனம்? இனி இந்த உயிர் இருந்து என்ன பிரயோசனம்’ என்றெண்ணி உயிரை விடத் துணிந்தான். அதற்கு மேலும் அவனைச் சோதிக்க மனமில்லாத சிவபெருமான் "அருச்சுனா! உன் சிவபக்திக்கு மெச்சினேன். நீ நேரே திரிகூடமலை செல்! அங்கு பூஜைப்பெட்டியைப் பெறுவாய்!" என்று கூறி, பாசுபதத்தையும் அளித்து ஆசி வழங்கினார்.

இது நடந்த நாள் பங்குனி உத்திரம் ஆகையால் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கிறது. இங்கிருக்கும் பீடம் மிக சக்தி வாய்ந்தது. இதைக் கையால் தொழுதாலே சகல பாபங்களும் விலகும்.
தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள், பாசிமணி என்று நம்மை விடாமல் துரத்தி வியாபாரம் செய்துவிடுவார்கள்.

திருநெல்வேலி வரை செல்பவர்கள். திருக்குற்றாலநாதரையும் கண்ணாரக் கண்டு அவரது ஆசி பெற்று வாருங்கள்!
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!
 -- மாணிக்கவாசகர், திருப்புலம்பல்.

யார் ஒருவர் இறக்கும் தருவாயில் திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தியைத் தியானித்து அப்பர் பெருமானின் மரண பயம் நீக்கும் ம்ருத்யுஞ்ஜய துதியான,

’உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது

குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’

என்ற துதியை ஒருமுறையாவது ஓதுகின்றார்களோ அவர்களுடைய வேண்டுகோளை எம்பெருமான் மனமுவந்து ஏற்பதால் அதுவே அவர்கள் இப்புவியில் ஏற்கும் கடைசி பிறப்பாக அமையும் என்பது உறுதி.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

1 கருத்து:

  1. நாம் RIP என்பது எவ்வளவு முட்டாள்தனம் என்றறிந்தேன். சிவசிவ!

    பதிலளிநீக்கு