முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

சனி, 16 ஏப்ரல், 2016

சிவனை அடைய வழி யாது ? செயற்கரிய செயல் செய்யும் தலைவன் யார் ? சமய கல்வி ?

whatsapp வாட்ஸேப்பில் பதிவு செய்யக்கூடிய சைவ சிவ பதிவுகள்.

திருச்சிற்றம்பலம்.

செயற்கரிய செயல் செய்யும் தலைவன் யார் ?


பல பெரும் தொழில்களுக்கு அதிபராக இருந்து பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டே இருக்கும் ஒருவர் தன்னுடைய தொழிலில் ஒரு கீழ்மட்ட தொண்டனின் சாதாரண ஓடுகள் வேய்ந்த வீட்டிற்கு வருவாரா ?  அந்த கீழ்மட்ட தொண்டனின் வீட்டில் ஒரே சமயத்தில் 10 பேருக்கு மேல் அமர முடியாது. அப்படி ஒரு அதிபர் தன் தொண்டனின் வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும் ?  மிகவும் பகட்டான ஆடையுடன், 100 பேர் புடை சூழ 100 கார்கள் அணிவகுக்கவா வருவார் ?  தொண்டனுக்கு இணையாக, அவன் தோளோடு தோள் சேருமாறு, தன் மேலான தகுதியை விட்டு மிகவும் கீழ் இறங்கி, சாதாரண உடையில், வெறும் 3,4 பேர் கூட வர, அந்த தொண்டருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டல்லவா வருவார் ?  இப்படி ஒரு காட்சியை, இன்றைய நாளில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால், இதை செய்து கொண்டே இருக்கிறார் ஒருவர்.
அவர் தாம் நம் தலைவர் பரசிவனார்.  தன்னுடைய நிகரற்ற தன்மையை மறைத்துக் கொண்டு, அற்பமான மனிதர்களின் தகுதிக்கு ஏற்ப தன்னை தாழ்த்திக் கொண்டு அந்த உயிர்களுக்கு நிகராக வந்து அமர்ந்து அருள் புரிகிறார். யார் செய்வார் இந்த செயலை ? எவர் துணிவார், இது போன்ற செயலைச் செய்ய ? மலமிலாத, மலமறுக்கும் பித்தன் மட்டுமே இதைச் செய்வான். அப்படிப்பட்ட உயர்ந்த சிவத்தை நாம் எப்படித் துதித்து வழிபடுவது ? செய்வது ஒன்றும் அறியாமல் விழிக்கின்றோமே ?  நமசிவாய.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
                   - திருமூலர்.

தாள் - திருவடி.
தண்ணின்ற தாள் - குளிர்ச்சி பொருந்திய இணையில்லாத திருவடி.
களிம்பு - தேவையற்ற பொருள். உயிர்களிடம் பொருந்தியுள்ள மலம்.
ஆகாயத்தைவிட பெருமைமிக்க சிவபெருமான், தன் நிலையையைத் தாழ்த்திக் கொண்டு, உயிர்களின் தன்மைக்கு பொருந்தும் திருமேனி தரித்து தன் குளிர்ச்சி பொருந்திய இணையில்லா திருவடியை மலப் பிணி அண்டாது காவலாக வைத்து, நம் மனதிற்குள் நின்று நம்மை உருக்கி பேரானந்தத்தை நல்கி, நம்மோடு பொருந்தியிருக்கும் மலத்தை தன் பார்வையாலே அறுத்து நீக்கி அருள் புரிகிறாரே.
இந்த செயலை இவரை விட வேறு எவர் செய்ய முடியும். அத்தகைய பெருமானை, நாம் எப்போதும் ஏத்துவோம். நமசிவாய.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

சிவனை அடைய வழி யாது ?

ஒற்றை ஊசியின் மேல் நின்று கொண்டு நான் பல ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமா ? இல்லறத்தை துறந்து காட்டிற்குள் சென்று கரையான் புற்று மறைக்க அவனை வேண்டி நிற்க வேண்டுமா ? அவனைத் தேடித் தேடி உடல் நோக காடு மலை கடக்க வேண்டுமா ?  பெரிய விளக்கிலே திரியாக நம் உடலை இட்டு எரிக்க வேண்டுமா ?  எத்தனை பெருமையுடைய பரம்பொருளை எத்தனை தியாகம் செய்து அடைய முடியும் என்றாலும் அது தகும். ஆனால், அந்த பரம்பொருளோ, அனைவராலும் கொடுக்கக்கூடிய சாதாரண பொருளைக் கொடுத்தாலே நம் அன்பு வலையுள் அகப்பட்டு நமக்கு அருள் புரிந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளதே. இந்தக் கருணையை என்னவென்று சொல்வது ? அந்த பரம்பொருளுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் ? நம்மிடம் நம் பொருள் என்று என்ன இருக்கிறது ? பூவும் நீரும் கொடுத்தாலே அந்த பரம்பொருளை நம் வசப்படுத்தி விடலாம். இந்த சிறு ரகசியம் கூட தெரியாமல் எத்தனை பாவிகள் ஈசனைப் பெறாமல் பிறப்புச்சுழியில் விழுந்து தவிக்கிறார்கள் ?

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
       -- திருமூலர்

பொழிப்புரை :

`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவ்விடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

கோடை விடுமுறை வைதீக சைவ பாடம்


தற்போது உள்ள கல்வி முறையில் அடிப்படையில் போதிய சமய கல்வி நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வில்லை. சொல்லப்போனால், நம் சமயம் சார்ந்த அத்தனை செய்திகளையும் வரலாறுகளையும் திராவிட அரசுகள் மாறி மாறி கொஞ்சம் கொஞ்சமாக பாடத்திட்டங்களில் இருந்து அழித்து விட்டன. தமிழ் இலக்கியங்கள் என்றாலே, அதன் இதயத்தில் சைவ இலக்கியங்களே உள்ளன. ஆனால், தமிழ் இலக்கியங்கள் என்று இன்று ஏதேதோ புத்தகங்களை படிக்கிறார்கள். வெளிநாட்டவர் கைக்கூலிகளால் திட்டமிடப்பட்டு இந்து சமயம் முற்றிலுமாக நம் கல்வி முறையிலிருந்து வேரறுக்கப் பட்டிருக்கிறது. இதனாலேயே நாம் ஒவ்வொருவரும் நம் தலையில் வைத்துப் போற்றக்கூடிய நூல்களை நாமே கேலி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். இவ்வளவு இழிவான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை அறிவதே ஒரு சில விழுக்காடுகள் தாம். இது மிகவும் வேதைனைக்குரியது. இந்த நிலையை பயன்படுத்தியே ஒரு கொள்கையும் உண்மையும் இல்லாத மாற்று சமயத்தார் தம் நூல்களை நம்மிடம் நம் ஆட்களை வைத்தே புகுத்தி வருகிறார்கள். இந்த நிலை மாற, நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கு அடிப்படை சமயக் கல்வி கிடைத்திடுமாறு செய்திடல் வேண்டும். உங்கள் ஊரில், தெருவில் உள்ள கோவில்களை மையமாக வைத்து சில பெற்றோர்கள் சேர்ந்து சமய கல்வி வகுப்புகள் ஆரம்பியுங்கள். அனைத்து குழந்தைகளுக்கும் நம் சமய அடிப்படை செய்திகள், சமய கொள்கைகள், நம் இறைவனார் யார், நம் குருமார்கள் யார், நம் சமய நூல்கள் எவை, நம் சமய சின்னங்கள் எவை, நம் சமயம் வளர்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அனைத்து அடிப்படை தகவல்களையும் நம் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போய்ச் சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும். வயிறை வளர்க்கும் செயல்களை மட்டும் செய்யாமல், நம் ஞானத்தையும் சமயத்தையும் வளர்க்கும் செயல்களையும் ஒவ்வொருவரும் செய்யுங்கள். செயல் படுங்கள். செயல் படுத்துங்கள். எப்போதும் எம்பெருமானார் கூடவே துணையிருப்பார். நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.

திருமுறை இறைவனின் வடிவம்.

இறைவன் மந்திர வடிவமாக உள்ளான். திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்

மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்
  
என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.
  
திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.
   
நியாசம் = வைப்பு,
பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.
    
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை,
    
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே

    
என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.
 

இந்த வலைப்பூவின் குறிக்கோள்.

இந்து சமயம் என்பது சைவ, வைணவ சமயங்களைக் குறிக்கிறது. சைவ சமயமே அநாதியானது. தொன்று தொட்டு வருவது. வைணவம் பின்னாளில் தோன்றியது. ஆகவே சைவ சமயமே சமயம் என்பர் பெரியோர். அத்தகைய நம் சமயத்தில் ஞானம் வற்றாத ஊற்றாக பொதிந்து கிடக்கிறது. இன்றைய நடைமுறையில் பள்ளியில் சேர்ந்து படித்து வேலை பெற்று வாழ்கை நடத்தி வருபவர்களுக்கு இத்தகைய ஞானம் ஒன்று இருப்பதைப் பற்றியே தெரியாமல் இருக்கிறது. இதற்கு நம் கல்வி முறையில் இருந்து நம் சமய செய்திகளை திராவிட அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு விலக்கி அழித்ததே காரணம். நம் சமயங்களின் அடிப்படை தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், குருமார்கள், நமது வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அடையாளம் காட்டுவதே இந்த குழுவின் தலையாய குறிக்கோள்.

இறைவன் ஒருவரே, அந்த இறைவனுடைய எண் குணங்கள் எவை, இந்த உயிர்கள் எவை, அதன் தன்மை எவை, சைவ சித்தாந்த தத்துவங்கள் யாது உரைக்கின்றன,  என்பவை நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை விளக்குகின்றன. வேதங்கள், சிவாகமங்கள், பன்னிரு திருமுறை, 14 சாத்திரங்கள், இன்னும் பல சைவ நூல்கள் நமக்கு இறைவனை அடைய வழிகாட்டுகின்றன. சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வரும், 63 நாயன்மார்களும் நமக்கு குருவாக இறைவனை அடைய வழிகாட்டுகிறார்கள் என்பதை பல பதிவுகளில் நாம் முன்னர் பார்த்தோம். திருமுறைகளில் பல்வேறு பதிகங்களும் பொருளும் பகிரப்பட்டன. இன்னும் அறிய வேண்டியவை எண்ணற்றன.
நாம் அனைவரும் தொடர்ந்து நம் வேலைகளை பார்த்துக்கொண்டே, புதுப்புது திருமுறை பாடல்களை படித்தும், அதன் பொருள் அறிந்தும், சைவ சித்தாந்தம் படித்தும், கோவில் தல வரலாறுகள் அறிந்து அக் கோவில்களுக்கு சென்றும், நம்மால் இயன்ற சிவப்பணிகளை செய்தும், நம் குருமார்களின் வரலாறு அறிந்தும், அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை அறிந்தும், புராண வரலாறு அறிந்தும் வருவோம். நாம் படித்ததை, அறிந்ததை இங்கு நாம் யாவர்க்கும் பகிர்வோம். தொடர்ந்து இணைந்திருந்து சிவஞானத்தை பகிருங்கள்.
நம் பன்னிரு திருமுறைகள் பற்றி அறியாதவர்கள் யாரும் இவ்வுலகில் இருக்கக்கூடாது. தொடர்வோம் நம் பயணத்தை.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நமசிவாய.

1 கருத்து: